மட்டக்களப்பில் பெயர் பலகைகளை நீக்கிய சம்பவம் – அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

மட்டக்களப்பில் பெயர் பலகைகளை நீக்கிய சம்பவம்  –  அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

மட்டக்களப்பு – வாழைச்சேனை மற்றும் கொக்கட்டிச்சோலை பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட தொல்பொருள் இடங்களுக்குச் செல்லும் பாதைகளை அடையாளம் காண்பதற்காக நிறுவப்பட்ட பல பெயர்ப்பலகைகளை அகற்றியது தொடர்பான ஆதாரங்களை இன்று (24) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொல்பொருள் திணைக்களத்தால் நிறுவப்பட்ட பெயர்ப்பலகைகள் கடந்த 22 ஆம் திகதி அகற்றப்பட்டதாகவும், பெயர்ப்பலகைகளை அகற்ற முயன்ற நபர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள தேவிமலை தொல்பொருள் தளத்திற்கு செல்லும் பாதையை அடையாளம் காண நிறுவப்பட்ட ஆறு பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச சபையின் தலைவர் எஸ். சுதாகரன் மற்றும் பிரதிச் செயலாளர் பத்மநீதன் ஆகியோர் இதில் அடங்குவதாக அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதன்படி, வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த  விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.

இதேவேளை, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் தொல்பொருள் இடமாக அடையாளம் காணப்பட்டுள்ள சாந்தமலை கோவிலுக்குச் செல்லும் பாதையைக் குறிக்கும் இரண்டு பெயர் பலகைகள் கடந்த 21ஆம் திகதி ஒரு குழுவினால் அகற்றப்பட்டதாக அமைச்சர் நாடாளுமன்றில் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This