இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய்ப் பால் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு

இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி தேங்காய்ப் பால் தற்போது அனுமதி மற்றும் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தென்னை தொழிற்றுறையுடன் தொடர்புடைய தொழிற்றுறையினருக்குத் தேவையான மூலப்பொருட்களை வழங்குவதும் அதன் மூலம் உள்நாட்டு தேங்காய்களின் விலையைக் குறைப்பதே இதன் நோக்கமாகும்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு மற்றும் கைத்தொழில் அமைச்சு இணைந்து பெற்ற அமைச்சரவை அனுமதிக்கு அமைய, குறித்த இறக்குமதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மார்ச் 2025 இல் அமைச்சரவையின் அனுமதிக்குப் பின்னர், 200 மில்லியன் தேங்காய்களுக்கு சமமான அளவில், தேங்காய் பூ, தேங்காய் பால் அல்லது மா, தேங்காய் துண்டுகள் போன்ற தேங்காய் சார்ந்த பொருட்களை இறக்குமதி செய்வதற்காக செயற்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட முதல் இருப்பு இதுவென அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த இருப்பினை நாளை காலை 9.00 மணிக்கு ஒருகொடவத்தையில் உள்ள இலங்கை சுங்க வளாகத்தில் திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.