பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை சம்பவங்களை தடுக்க உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை சம்பவங்களை தடுக்க உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை செய்வதைத் தடுக்க தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களை அவசியம் அமுல்படுத்துமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் பகிடிவதையைத் தடுப்பதற்காக ஏற்கனவே வகுக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் தொகுப்பை செயற்படுத்துவது அவசியம் என பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (09) உத்தரவிட்டது.

கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் இந்த வழிகாட்டுதல்களை செயற்படுத்த தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி மற்றும் வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.

2020 ஆம் ஆண்டில் பகிடிவதை காரணமாக ஏற்பட்ட காயங்களால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தொடர்ந்து பாதிக்கப்பட்ட முதலாம் ஆண்டு பல்கலைக்கழக மாணவரான பசிந்து ஹிருஷான் டி சில்வா தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு மீதான தீர்ப்பை வழங்கும் போது, ​​நீதியரசர்கள் ஷிரான் குணரத்ன, பிரியந்த பெர்னாண்டோ மற்றும் சோபித ராஜகருணா ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.

இந்த உத்தரவுகள் எவ்வாறு செயற்படுத்தப்படுகின்றன என்பதற்கான முன்னேற்றத்தை மீளாய்வு செய்ய அடுத்த வருடம் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வழக்கை மீண்டும் அழைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Share This