பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைக்கு அரசாங்கம் முற்றுப்புள்ளி

பல்கலைக்கழகங்களில் பகிடிவதையுடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கும் மாணவர்களை பாதுகாப்பதற்கு ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் அதிகாரியொருவரை நியமிக்க கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
பல்கலைக்கழக நிர்வாக சபையின் கீழ் செயற்படும் வகையில் அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதாக பிரதியமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளது.
கலந்துரையாடலுக்கு முன்னர் பகிடிவதைக்கு எதிரான நடவடிக்கையாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உயிரிழந்த சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பிலான விசாரணை அறிக்கையும் இந்த கலந்துரையாடலின் போது முன்வைக்கப்படவுள்ளது.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பம் பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்ற மாணவர் ஒருவர் , கடந்த 29 ஆம் திகதி தற்கொலை செய்து கொண்டார்.
மன அழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்து கொள்வதாக குறித்த மாணவன் கடிதம் எழுதியுள்ளதுடன் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட பகிடிவதை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பொலிஸில் முறைப்பாடளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து உயர்கல்வி அமைச்சு நேற்று (02) அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இந்த விடயம் குறித்து முழுமையான விசாரணை நடத்த விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கை கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.
பகிடிவதைக்கு உள்ளானதாக கூறப்படும், மேலும் 16 மாணவர்களிடம் சமனலவெவ பொலிஸார் நேற்று வாக்குமூலங்களையும் பதிவு செய்தனர்.