காசா போர் நிறுத்தம் தொடங்கியது – மத்தியஸ்தரான கத்தார் உறுதிப்படுத்தியது

காசா போர் நிறுத்தம் தொடங்கியது – மத்தியஸ்தரான கத்தார் உறுதிப்படுத்தியது

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்தம் தொடங்கியுள்ளதாக கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார்.

“காசாவில் போர் நிறுத்தம் எப்போது தொடங்கும் என்ற செய்திகள் குறித்து, இன்று விடுவிக்கப்படவுள்ள மூன்று பணயக்கைதிகளின் பெயர்கள் இஸ்ரேல் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்,” என்று மஜீத் அல்-அன்சாரி குறிப்பிட்டுள்ளார்.

விடுவிக்கப்படவுள்ள மூன்றுப் பேரில் ஒருவர் ருமேனிய நாட்டைச் சேர்ந்தவர், மற்றவர் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்தவர், இதனால் போர் நிறுத்தம் தொடங்கிவிட்டது.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, காசாவில் ஹமாஸுடனான போர்நிறுத்தம் உள்ளூர் நேரப்படி காலை 11:15 மணிக்கு (09:15 GMT) தொடங்கும் என்று இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்படவுள்ள மூன்று இஸ்ரேலிய பெண் கைதிகளான ரோமி கோனென், டோரன் ஸ்டெய்ன்பிரெச்சர் மற்றும் எமிலி டமாரி ஆகியோரின் பெயரை ஹமாஸ் வெளியிட்டதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டஜன் கணக்கான பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கவுள்ள மூன்று கைதிகளின் பெயர்களை வழங்குவதற்கான தனது உறுதிமொழியை ஹமாஸ் நிறைவேற்றவில்லை என்று நெதன்யாகு முன்னர் குற்றம் சுமத்தியிருந்தார்.

“பாதுகாப்பு மற்றும் ஒழுங்கைப் பேணுவதற்கான அரசாங்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக” ஆயிரக்கணக்கான பாலஸ்தீன காவல்துறை அதிகாரிகள் பிரதேசத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக காசாவில் உள்ள அரசாங்க ஊடக அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

மேலும், நகராட்சிகள் “வீதிகளை மீண்டும் திறந்து மறுவாழ்வு அளிக்கத்” தொடங்கியுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இயல்பான வாழ்க்கை விரைவாகவும் படிப்படியாகவும் திரும்புவதை உறுதி செய்வதற்கான அரசாங்கத் திட்டத்தின்படி நடவடிக்கைகளைத் தொடங்க அரசாங்க அமைச்சகங்களும் நிறுவனங்களும் முழுமையாகத் தயாராக உள்ளன” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இடம்பெயர்ந்த மக்கள் திரும்புவது போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்த ஏழு நாட்களுக்குப் பின்னர் தொடங்கும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து தகவல்களைப் பெறவும், சாத்தியமான ஆபத்துகளைத் தவிர்க்க அழிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து விலகி இருக்கவும், சந்தேகத்திற்கிடமான ரொக்கெட்டுகள் போன்ற பொருட்களிலிருந்து விலகி இருக்கவும் எங்கள் மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

Share This