
பதுளையில் மண் சரிவு காரணமாக நால்வர் உயிரிழப்பு – பலர் காணாமல் போயுள்ளனர்
நிலவும் சீரற்ற வானிலை காணமாக பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒன்பது பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் பதுளை மாவட்டச் செயலாளர் பந்துக்க அபேவர்தன தெரிவித்துள்ளார்.
சீரற்ற வானிலை காரணமாக மாவட்டத்தில் ஆறு இடங்களில் நிலச்சரிவுகள் மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த அனர்த்தங்களில் சிக்கி இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் ஒன்பது பேர் வரை காணாமல் போயுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்டம் முழுவதும் பல இடங்களில் நிலச்சரிவுகள் மற்றும் மண் சரிவுகள் பதிவாகியுள்ளன. காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளில் நிவாரணக் குழுக்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நாட்டின் சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பதுளை, கேகாலை ,குருநாகல், மாத்தளை , இரத்தினபுரி மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும், நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கையும், தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
