இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன் முறையாக ஒரே நேரத்தில் நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நியமனம்

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன் முறையாக, நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்தப் பதவி உயர்வுகளுக்கு அனுமதியளித்துள்ளார்
இதன்படி, தர்ஷிகா குமாரி, பத்மினி வீரசூரிய, ரேணுகா ஜயசுந்தர மற்றும் நிஷானி செனவிரத்ன ஆகியோர் பிரதி பொலிஸ்மா அதிபர்களாகப் பதவியேற்க உள்ளனர்.
இவர்களில் மூவர் 1997 ஆம் ஆண்டு பயிற்சி உப பொலிஸ் பரிசோதகர்களாக இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்தனர்.
நியமிக்கப்பட்ட இந்த நான்கு பெண் பொலிஸ் அதிகாரிகளில், தர்ஷிகா குமாரி தற்போது பொலிஸ் களப் படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.
மேலும், அந்தத் தலைமையகத்தில் முதல் பெண் கட்டளை அதிகாரியாகப் பதவியேற்று சாதனை படைத்துள்ளார்.
பத்மினி வீரசூரிய தற்போது களுத்துறை மாவட்டத்திற்கு பொறுப்பான பதில் பிரதி பொலிஸ்மா அதிபராக உள்ளார். இதன் மூலம், இலங்கை பொலிஸ் வரலாற்றில் ஒரு மாவட்டத்திற்கு பொறுப்பேற்ற முதல் பெண் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
ரேணுகா ஜயசுந்தர, பாலியல் குற்றங்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவின் பதில் பிரதி பொலிஸ்மா அதிபராகவும், நிஷானி செனவிரத்ன ஆராய்ச்சி மற்றும் தகவல் பிரிவின் பதில் பிரதி பொலிஸ்மா அதிபராகவும் பணியாற்றி வருகின்றனர்
இந்த நால்வரில் மூத்த அதிகாரியான நிஷானி செனவிரத்ன, அரச புலனாய்வு சேவையில் நீண்ட காலம் பணியாற்றியவர் ஆவார்.