பிரதமரின் தேர்தல் சட்ட மீறல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பெப்ரல் அமைப்பு கோரிக்கை

உள்ளூராட்சித் தேர்தலின் அமைதிக் காலத்தின் போது பிரச்சாரத்தை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் கட்சி ஆதரவாளர்களுக்கு வழிகாட்டும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் அண்மைய அறிக்கையை பெப்ரல் அமைப்பு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஆதரவாளர்களிடம் நுட்பமான வழிகளில் பிரச்சாரத்தை மேற்கொள்ளலாம் என அமைதிக் காலம் ஆரம்பிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் மொரட்டுவ பகுதியில் இடம்பெற்ற அரசியல் பேரணியில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, கூறியதை பெப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
“இன்னும் 04 மணி நேரத்தில் அமைதி காலம் ஆரம்பமாகிறது. ஆனால் நீங்கள் அமைதியாக இருக்கத் தேவையில்லை.தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளலாம். சில வார்த்தைகளை உரக்கச் சொல்லலாம்” என்று பிரதமர் கூறியிருந்தார்.
இந்நிலையில் அமைதி காலத்தில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வது தேர்தல் சட்டத்தை மீறுவதாகும் என சுட்டிக்காட்டிய பெப்ரல் அமைப்பு பிரதமரின் அறிக்கை தேர்தல் சட்டத்தை மீறுவதாகவும், சட்டத்தை புறக்கணிப்பதாகவும் கருதுகிறது.
பிரதமரின் அவ்வாறான அறிக்கை நாட்டின் சிறந்த அரசியல் கலாச்சாரத்திற்கு அச்சுறுத்தல் என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கு இந்த அறிக்கை அச்சுறுத்தலாகக் கருதப்பட்டதால், விசாரணை மேற்கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.