சிறைச்சாலைக்குள் போதைப்பொருள், தொலைபேசி, ஆடம்பரம் – யார் கொடுத்த அதிகாரம்?

*சிறைவாசம் தண்டனையா ஆடம்பர வாழ்வா?
*காலி சிறைச்சாலை வீடியோ – இலங்கையின் சிறை அமைப்பு முழுவதும் சீரழிந்துவிட்டதா?
*சிறைச்சாலைகளின் உண்மை முகம் வெளியானது – சட்டமும் சமத்துவமும் எங்கே?
பாலகணேஷ் டிலுக்ஷா
இலங்கைத்தீவில் உள்ள சிறை நிர்வாகக் கட்டமைப்பு முறைமை மீண்டும் பொதுமக்களின் விசனத்துக்கு உள்ளாகி வருகின்றது. குறிப்பாக சிறைச்சாலை ஒன்றுக்குள் சுதந்திரமாக தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படும் காணொளி பதிவு ஒன்று வெளியாகியுள்ளமை, இந்த விசனத்தை மக்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.
இலங்கைச் சிறைச்லைகளின் பாதுகாப்பு மற்றும் கைதிகளின் உரிமைகள் சமத்துவமாக பேணப்படாமை, குறிப்பாக சில கைதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பாக, சர்வதேச மன்னிப்புச் சபையின் வருடாந்த அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்படுவது வழமை.
ஆகவே, குறித்த காணொளி பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. குறிப்பாக சிறைச்சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகள், முற்றிலும் அரசியல் தேவைகளை மையமாக் கொண்டு அமைந்து விட்டதா என்ற கேள்விகள், சந்தேகங்களையே அக் காணொளி வெளிப்படுத்துகிறது.
தென் மாகாணம் காலி சிறைச்சாலையில் போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதி சிறைச்சாலைக்குள் தொலைபேசியைப் பயன்படுத்துவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திருந்தது.
தொலைபேசியை பார்த்துக்கொண்டு போதைப்பொருளையும் பயன்படுத்தினார். அதேவேளை மற்றொரு கைதி அவருக்கு தலை மசாஜ் செய்வதும் அந்தக் காணொளியில் பதிவாகியிருந்தது.
இந்த காணொளி சமூகவலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிறைச்சாலைத் தலைமையகத்திலிருந்து உயர்மட்ட குழு காலி சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இது ஒரு தனிப்பட்ட சம்பவம் இல்லை. இதுபோன்ற பிரச்சினைகள் சிறைச்சாலை அமைப்பில் நீண்ட நாட்களாகவே இடம்பெற்று வருகிறது. இது அந்த சீரழிவின் மற்றுமொரு உதாரணமாகவே இந்த சம்பவத்தைக் கூறலாம்.

சிறைச்சாலைகளுக்குள் கையடக்கத்தொலைபேசி , போதைப்பொருள் கடத்தல் – நீண்டகால பிரச்சினை
கைதிகளைச் சந்திக்க வரும் மனைவிகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் கையடக்கத் தொலைபேசினய் மட்டுமின்றி போதைப்பொருட்கள் உட்பட பல தடைசெய்யப்பட்ட பொருட்கள் சிறைச்சாலைகளுக்குள் கொண்டுவரப்படுகின்றன.
இவ்வாறான எண்ணற்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளன.
இவ்வாறான செயல்கள் சில சிறை அதிகாரிகள் பணம் பெறுவதற்காக கைதிகளுடன் கூட்டுச் சதி செய்வதை மறுக்க முடியாத அளவுக்கு வெளிப்படுத்துகிறது.
இதன் விளைவாக, சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருள் உபயோகம் அதிகரித்துள்ளது.
கைதிகள் கையடக்கத்தொலைபேசிகளை பயன்படுத்தி குற்றவாளி வலையமைப்புகளை இயக்குகிறார்கள்.
சிறைச்சாலைகளிலிருந்தே கொலை உள்ளிட்ட குற்றங்கள் திட்டமிடப்படுகின்றன.
நீதிபதி சரத் அம்பேபிட்டிய கொலை வழக்கு, சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளுக்கிடையேயான ஊழல் தொடர்பின் மிக மோசமான உதாரணமாக இன்றும் நாட்டின் நினைவில் உள்ளது.
பணக்கார, அரசியல் செல்வாக்கு பெற்ற கைதிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. சமத்துவத்தின் அடித்தளமே நிலைகுலைந்துள்ளது.
இன்றைய நிலையில் சில கைதிகளுக்கு சிறைச்சாலை தண்டனை என்பது, உண்மையில் தண்டனையல்ல என்றே சொல்லலாம். குறிப்பாக நிதி வசதி மற்றும் அரசியல் தொடர்பு உள்ள கைதிகளுக்கு.
ஆடம்பர வைத்தியசாலைகளில் தண்டனை அனுபவிக்கும் வசதி
இரவில் வீட்டிற்குச் சென்று வர அனுமதி, விசேட அறைகள், விசேட உணவு போன்ற சலுகைகள், வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.
இத்தகைய செயல்கள் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படை கோட்பாட்டையே கேள்விக்குள்ளாக்குகின்றன.
நமது சிறைச்சாலைகள் தற்போது, அதிக நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளன. ஒழுங்கின்மை, ஒழுங்கற்ற நிர்வாகம் பெருகியுள்ளது.

சிறை அமைப்பு முழுமையாக மாற்றப்பட வேண்டிய காலம் இது,
கைதிகளுக்கிடையில் மோதல்களும் அதிகரித்துள்ளது, பாதுகாப்பு நடைமுறைகள் முற்றிலும் தளர்ந்துள்ளன.
ஆனால் மற்றொரு உண்மை என்னவென்றால், கைதிகளும் மனிதர்களே. பலர் திடீர் கோபம், மன அழுத்தம் அல்லது கடுமையான சூழ்நிலைகளின் விளைவாக குற்றம் செய்து இருக்கலாம். பல முன்னேறிய நாடுகளில், சிறு குற்றவாளிகள் வீட்டிலேயே மேற்பார்வையின் கீழ் தண்டனையை அனுபவிக்கிறார்கள்.
சிறையில் இருக்கும் போதே தொழில் மற்றும் திறன்கள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. சமுதாயத்தில் மீண்டும் சேர்க்கும் மனிதாபிமான முறை உள்ளது.
நாமும் இத்தகைய முன்மாதிரிகளை பின்பற்ற வேண்டியது அவசியம்.
நாம் ஒரு சமூகமாக, தண்டனையை மட்டுமே கவனிப்பதற்குப் பதிலாக, மனிதாபிமான முறையில் கைதிகளை மாற்றவும், சமுதாயத்தில் பயனுள்ளவர்கள் ஆக்கவும் முயற்சிக்க வேண்டும். இதுவே நீதி, பாதுகாப்பு மற்றும் மனித நேயம், கைதிகள் மீண்டும் குற்றமிழைக்காமல் இருப்பதற்கு இதுவே உகந்த உத்தியாக அமைகின்றது.
சிறையில் தொழில் பயிற்சி – பொருளாதாரச் செலவையும் உற்பத்தியையும் சமநிலைப் படுத்துதல்
பொருளாதார ரீதியாக நோக்கினோமேயானால், கைதிகளை பயன்படுத்தி கூட தொழிற்சாலை மற்றும் உற்பத்தித் திறனையும் அதிகரிக்கலாம்.
சில நாடுகளில் கைதிகள் சிறைபிடிப்பு காலத்தில் தொழிற்சாலைகளில் அல்லது பயிற்சி மையங்களில் பணியாற்றுகிறார்கள். இதனூடாக பொருளாதார ரீதியாக உற்பத்தி அல்லது சேவைகளை உருவாக்க உதவும்.
உதாரணமாக கைதிகள் பராமரிப்பில் இருக்கும் காலத்தில் கைத்தொழில், விவசாயம் அல்லது புதிய தொழில்நுட்ப திறன்களை கற்றுக்கொள்ளவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கலாம். இதனூடாக கைதிகளும் வேலைவாய்ப்பிற்கு பங்களிங்கின்றனர்.
சிறையில் உள்ள பயிற்சி திட்டங்கள், கைத்தொழில் பொருட்கள், விவசாய உற்பத்தி போன்றவற்றை விற்பனை செய்ய முடியும்.
இதனூடாக சிறைச் செலவுகளை குறைக்க முடியும் கைதிகளுக்கும் வெளியில் சென்றதும் புதிய வருமான வாய்ப்புகள் கிடைக்கும்.
ஆனாலும் பொருளாதார பயனுக்கு மட்டும் கைதிகளை பயன்படுத்துவது சுயநலம் மற்றும் மனித உரிமை மீறல் என்று கூட கூறலாம்.
போதைப் பொருள் விற்பனை அல்லது கடத்தல்களில் ஈடுபடும் சிலர் பெருமளவு வருமானத்தை கருத்தில் கொண்டும், திடீர் பணக்காரர்களாக வரும் நோக்கிலும் செயற்படுகின்றனர். வேறு சிலர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதற்கு போதிய வருமானமின்னையும் ஒரு காரணம்.
ஆகவே திறன்கள், தொழில் பயிற்சி, கல்வி ஆகியவை அவர்களுக்கு சிறந்த வாழ்க்கைக்கான திறனை அளிக்கும்.
மீண்டும் சமூகத்தில் அவர்கள் இணையும் போது பயனுள்ளவர்களாகவும் மாறுவர்.
முடிவாக, சிறையில் தொழில் பயிற்சி பெற்றவர்கள் வெளியேறுகையில் குற்றத்தை மீண்டும் செய்யும் வாய்ப்பு குறையும்.
இதனால் சமூக செலவை குறைக்க முடியும் என்பதுடன், பொருளாதார உற்பத்தியும் ஊக்குவிக்கப்படும் என்பதையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஜனாதிபதி உறுதி செய்ய வேண்டியவை
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உடனடி நடவடிக்கை எடுப்பது கட்டாயம்
இந்த காணொளி நாடு முழுவதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜனாதிபதி தாமாகவே முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
அனைத்து கைதிகளுக்கும் ஒரே சட்டமும், ஒரே தண்டனை விதிகளும் நடைமுறையில் இருக்க வேண்டும், எந்த கைதிக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படக் கூடாது.
சிறைச்சாலை நிர்வாகத்தில் பரவியுள்ள ஊழல் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும், தவறு செய்யும் சிறை அதிகாரிகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பொதுமக்கள் சட்டத்தில் நம்பிக்கை வைக்க வேண்டுமென்றால், நீதியும் சமத்துவமும் உறுதி செய்யப்படும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்.
ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் நடைமுறை – மறுசீரமைப்பு அவசியம்
கடந்த காலங்களில் மதத் தலைவர்களும் அரசியல் நபர்களும் பரிந்துரைத்ததற்காக பல கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது நீதித்துறைக்கே அவமானமாகும்.
இது மதத் தலைவர்களின் கண்ணியத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது சட்டத்தையும், நீதியையும் கேலி செய்யும் செயலாகும்.
மன்னிப்பு வழங்கும் அதிகாரம் தெளிவான விதிமுறைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். பொறுப்புணர்வும் கடுமையான சரிபார்ப்பு முறைகளும் அவசியம்.
நீதித்துறை மறுஆய்வு சட்டம் – காலத்தின் தேவை
சிலர் தவறாக குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டிருந்தாலும், அவர்களின் தண்டனையை மீண்டும் பரிசீலிக்கும் சட்டம் இப்போது இல்லை. இது மனித உரிமைக்கு எதிரானது, இது நீதியின் அடிப்படை கொள்கையை மீறுகிறது.
தண்டனைகளை மறுஆய்வு செய்யும் சட்டம் அவசியம் உருவாக்கப்பட வேண்டும்.
நீதிமன்ற வழக்குகள் தாமதம் – பொதுமக்களின் துன்பம்
இன்றைய நீதித்துறை அமைப்பில் வழக்குகள் வருடங்கள், சிலசமயம் பல தசாப்தங்களாக இழுத்தடிக்கப்படுகின்றன. சில வழக்கறிஞர்களும் இந்த தாமதத்திற்கு உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
இதனால் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு அநீதி ஏற்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அளவிட முடியாத துன்பம் உண்டாகிறது.
இது நீதித்துறையின் நம்பிக்கையை பாதிக்கிறது. அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து வழக்குகள் விரைவில் தீர்க்கப்படும் வகையில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். காலி சிறைச்சாலை காணொளி முழு சிறை அமைப்புமே சீரழிந்துள்ளது என்பதற்கான எச்சரிக்கை மணி.
ஒரு நாகரிகமான, சட்டம் நிலைநிறுத்தப்படும் நாட்டை உருவாக்க, முறையான மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை.
