புலம்பெயர் தமிழர்கள் தாயகம் திரும்ப வேண்டும் – ஜனாதிபதி அநுர அழைப்பு

புலம்பெயர் தமிழர்கள் தாயகம் திரும்ப வேண்டும் – ஜனாதிபதி அநுர அழைப்பு

வடக்கில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்கள் தாயகம் திரும்ப வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், புலம்பெயர் தமிழ் மக்கள் வடக்கில் தங்களின் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் செய்திருந்த ஜனாதிபதி சங்கிலியன் பூங்காவில் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். இதன்போது உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் போர் புரிந்தோம் அதனால் என்ன நடந்தது ? அழிவுகளை தான் சந்தித்தோம். எம் உறவுகளை இழந்தோம். வடக்கிலும் தெற்கிலும் அதே நடந்தது. மீள அப்படி ஒரு நிலை எமக்கு வேண்டாம்

எங்கள் தலைமுறைகள் போர் புரிந்தோம் அடுத்த தலைமுறைகள் போர் இல்லாது சமாதானமாக அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும். போர் இனவாத அரசியல்வாதிகளுக்கே தேவை எமக்கு தேவையில்லை.

யாழ்ப்பாணத்தில் பல பாரம்பரிய கட்சிகள் உள்ளன. கடந்த பொது தேர்தலில் அவற்றினை தவிர்த்து எமது கட்சியை சார்ந்த மூவரை தெரிவு செய்துள்ளீர்கள். புதிய ஒரு அணி யாழில் இருந்து நாடாளுமன்றம் வந்துள்ளது.

யாழ்ப்பாண மக்கள் எம் மீது வைத்துள்ள நம்பிக்கையை நாம் வீணடிக்க மாட்டோம். இனவாதிகளுக்கு அஞ்சி மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்யாது இருக்கமாட்டோம். நாம் தேசிய ஒருமைப்பாட்டுக்காக என்றும் உழைப்போம்.

பாதுகாப்பு காரணங்களுக்கு என தமிழ் மக்களின் காணிகள் கையகப்படுத்தபட்டுள்ளது. அந்த காணிகளை பாதுகாப்பு தரப்பிடம் இருந்து மீள பெற்று காணி உரிமையாளர்களுக்கு கையளிப்போம்.

இன்னொரு யுத்தம் நாட்டில் தோன்றும் என்ற அச்சத்தில் கையகப்படுத்தப்பட்ட காணிகளை கடந்த அரசாங்கம் மீள கையளிக்கவில்லை. ஆனால் நாங்கள் இன்னொரு யுத்தம் நாட்டில் தோன்ற அனுமதிக்க மாட்டோம். அதனால் பாதுகாப்பு காரணங்களுக்கு என காணிகள் தேவையில்லை. விரைவில் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்போம்.

மூடப்பட்ட வீதிகளையும் படிப்படியாக திறந்து மக்கள் பாவனைக்கு கையளிக்கிறோம். வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் மூடப்பட்டு இருந்த வீதிகளை திறந்துள்ளோம்.

கொழும்பில் பாதுகாப்பு காரணம் என மூடப்பட்ட வீதிகளை திறக்கும் போது ஏன் யாழ்ப்பாணத்தில் வீதிகளை திறக்க கூடாது. நாட்டில் பாதுகாப்பு காரணமாக என மூட்டப்பட்ட வீதிகளை திறப்போம்

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான தகவல்களையும் வெளிப்படுத்துவோம். அரசாங்கத்திடம் , பொலிசாரிடம் , இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை வெளிப்படுத்துவோம்.

நாங்கள் நாட்டை பொறுப்பெடுத்த காலம் முதல் நாட்டை வளப்படுத்தி வருகின்றோம். எதிர்வரும் ஐந்து வருடத்தில் அந்நிய செலவாணியை அதிகரிப்போம். கைவிடப்பட்ட பல செயற்திட்டங்களை தற்போது மீள ஆரம்பித்துள்ளோம்.

அதேபோன்று பல வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ளோம். குறிப்பாக தமிழ் இளையோர் 2 ஆயிரம் பேருக்கு பொலிஸ் திணைக்களத்தில் வேலை வாய்ப்புக்களை வழங்கவுள்ளோம்.

அதேபோன்று இராணுவம் , கடற்படை விமான படையிலும் தமிழ் இளையோருக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதற்கு இங்குள்ள பெரியவர்கள் பெற்றோர்கள் இளையோர்களை இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த எடுத்து கூற வேண்டும்.

காங்கேசன்துறையில் ஒரு ஜனாதிபதி மாளிகை உள்ளது. அது எமக்கு தேவையில்லை. அதனை யாழ்ப்பாண மக்களுக்கு பயன்பட கூடியவாறு மக்களுக்காக அதனை வழங்கவுள்ளோம்

யாழ்ப்பாண பொது நூலகத்தை எரித்தார்கள். அது எமது இதயங்களை காயப்படுத்தி உள்ளது. நூலகம் எரிக்கப்பட்டது இனவாதத்தின் உச்சமாகவே நாங்கள் பார்க்கின்றோம். அதற்காகவே நூலகத்தை புனரமைக்க நிதி ஒதுக்கியுள்ளோம்

நாட்டிற்கு சுற்றுலா பயணிகள் பெருமளவில் வருகின்றார்கள் அவர்கள் வடக்கு செல்வது குறைவாக உள்ளது.

அதனால் நாம் உள்ளூர் விமான சேவைகளை வலுப்படுத்த உள்ளோம். அதன் ஊடாக சுற்றுலா பயணிகளை வடக்குக்கு செல்ல வைக்க முடியும். வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அழகிய கடற்கரைகள் உள்ளன. அவற்றினை சுற்றுலா தளங்களாக மேம்படுத்துவோம்

அதேவேளை யாழ்ப்பாணத்தின் அதன் பாரம்பரியம் கலாசாரம் பண்பாடு ஆகியவற்றை பிரதிநிதித்துவ படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தை மீள கட்டி எழுப்புவோம்.

வடக்கு கடற்பரப்பில் உள்ள கடல் வளங்களை அழிக்க அனுமதிக்க மாட்டோம். அந்த கடல் வளங்களை நம்பி பெருமளவான கடற்தொழிலாளர்கள் உள்ள போது, அந்த வளங்களை அழித்து அவர்களின் வாழ்வாதாரத்தை அனுமதிக்க முடியாது.

வடக்கு கடல் வளங்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதனை எடுங்கள் என கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளோம்.

வடக்கில் இருந்து பலர் புலம்பெயர் நாடுகளுக்கு சென்றுள்ளார்கள். அவர்கள் மீள நாட்டிற்கு வர வேண்டும். எமது நாட்டினை கட்டியொழுப்ப தங்கள் முதலீடுகளை நாட்டில் மேற்கொள்ள வேண்டும்.

கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து நாட்டை கட்டியெழுப்ப நாட்டிற்கு வருகை தர வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்.

Share This