டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் – முக்கிய சந்தேகநபர் கைது

இந்தியாவின் டெல்லி செங்கோட்டை அருகே இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் தற்கொலைப் படைத் தாக்குதல் என இந்திய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10 ஆம் திகதி கார் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது.
இதன்போது 10 பேர் உயிரிழந்ததுடன் 32 பேர் காயமடைந்தனர்.
காஷ்மீரைச் சேர்ந்த வைத்தியரான உமர் முகமது நபி என்பவர் காரை ஓட்டிச் சென்று வெடிவிபத்தை ஏற்படுத்தினார்.
இந்த வெடி விபத்து குறித்து முதலில் டெல்லி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
பின்னர், இந்த வழக்கை தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு பிரிவு, 10 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
