
வடக்கை நோக்கி நகரும் டிட்வா புயல் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
டிட்வா புயலானது தற்போது திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய்க்கும் மெதிரிகிரியவுக்கும் இடையில் மையம் கொண்டுள்ளது.
இது தொடர்ந்து வடக்கு வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது.
இது நாளை(29.11.2025) நண்பகலுடன் இலங்கையை குறிப்பாக வடக்கு மாகாணத்தை விட்டு நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு, வட மேற்கு, கிழக்கின் சிலபகுதிகள், மேற்கு மத்திய மாகாணங்களுக்கு கிடைத்து வரும் கன மழை நாளை காலை வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக வடக்கு மாகாணத்திற்கு அதிக ஈரப்பதன் மிக்க மழை மேகங்கள் குவிக்கப்படுகின்றன. ஆகவே வடக்கு மாகாணத்திற்கு தொடர்ச்சியாக கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இன்று மாலை முதல் காற்றும் வேகமாக வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு மாகாணத்திற்கு குறிப்பாக வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு ஏற்கனவே மிகக்கனமழை கிடைத்துள்ளது. தற்போதும் கன மழை கிடைத்து வருகின்றது.
பல குளங்கள் வான் பாய்கின்றன. பல குளங்களுக்கு வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தின் அருவியாற்றின்( மல்வத்து ஓயா) கீழ்ப்பகுதிகளுக்கு அதிக நீர் வரத்து தொடர்ந்தும் இருக்கும்.
ஏனெனில் அதன் நீரேந்து பிரதேசங்களில் கன மழை கிடைத்து வருகிறது. எனவே வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களின் தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம்.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பிற்பகல் முதல் மழை அதிகரிக்கும். இன்று இரவும் கனமழை தொடர்ச்சியாகக் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆகவே தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் போதுமான தயார்ப்படுத்தலோடும் எச்சரிக்கையோடும் இருப்பது அவசியம்.
கிழக்கு மாகாணத்திற்கு அவ்வப்போது மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும். எனினும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறைக்கு இன்று மாலை முதல் மழை படிப்படியாக குறைவடையும். ஆனால் ஆறுகளின் நீர் வரத்து தொடர்ந்தும் இருக்கும்.
நாளை பிற்பகலுக்கு பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாடு முழுவதும் இந்த அதி தீவிர வானிலை நிலைமை படிப்படியாக சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
