யாழில். புகையிரதங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடாத்திய சிறுவர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் புகையிரதங்கள் மீது கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு வந்த மூன்று சிறுவர்களை யாழ்ப்பாண பொலிஸார் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் பயணிக்கும் புகையிரதங்கள் மீது கடந்த சில தினங்களாக அரியாலை பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்துள்ளன.
கல் வீச்சு தாக்குதலில் புகையிரதத்தின் கண்ணாடிகள் சேதமடைந்தும், பயணி ஒருவர் காயமடைந்தும் இருந்தார். தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் புகையிரத நிலைய அதிபரினால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் புகையிரத பயணி ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் எடுத்த காணொளி ஒன்றில் மூன்று சிறுவர்கள் புகையிரதம் மீது கல் வீச்சு தாக்குதலை நடாத்துவது பதிவாகி இருந்தது.
குறித்த காணொளியின் அடிப்படையில், மூன்று சிறுவர்களும் அடையாளம் காணப்பட்டு , கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சிறுவர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.