அடையாளம் தெரியாத மூவரின் சடலங்கள் மீட்பு

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் அடையாளம் தெரியாத மூன்று சடலங்கள் நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, மன்னார் பொலிஸ் பிரிவுக்குள்பட்ட ஓலைத்தொடுவாய் கடற்கரையில் நேற்று மாலை சடலம் கண்டெடுக்கப்பட்டது.
பொலிஸாரின் கூற்றுப்படி, இறந்தவர் அடையாளம் காண முடியாத நிலையில் இருந்ததாகவும், மேலும் அவர் நீல நிற காற்சட்டை, நீலம் மற்றும் சிவப்பு நிற கோடுகள் கொண்ட டி-சர்ட் அணிந்திருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மன்னார் வைத்தியசாலையில் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
இறந்தவரை அடையாளம் காணவும், மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியவும் மன்னார் பொலிஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, நேற்று பிற்பகல் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியகலையில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இறந்தவர் சுமார் 73 வயதுடையவர் என்றும், கருப்பு ஜாக்கெட், சிவப்பு மற்றும் சாம்பல் நிற கோடுகள் கொண்ட சாரம் அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் குறித்து பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கிஸ்ஸ கடற்கரையில் நேற்று புதன்கிழமை இரவு அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியது.
இறந்தவர் வெளிர் நீல நிற நீண்ட கை சட்டை மற்றும் வேஷ்டியையும், கருப்பு பெல்ட்டுடன் கூடிய கருப்பு கால்சட்டையையும் அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் களுபோவில மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.