100க்கும் மேற்பட்டவர்களை பலியெடுத்த தென் கொரிய விமான விபத்து – விபத்திற்கு முன் நடந்தது என்ன?
தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை 181 பேருடன் சென்ற ஜெஜு ஏர் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தரையிறங்கும் போது ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக தென் கொரிய செய்தி நிறுவனமான யோன்ஹாப் தெரிவித்துள்ளது.
விமானத்தின் முதல் தரையிறங்கும் முயற்சி தோல்வியடைந்ததாகவும், இரண்டாவது முயற்சி விபத்தாக மாறியதாகவும் அது மேலும் கூறியது.
தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து 175 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களை ஏற்றிச் சென்ற போயிங் 737-800 விமானத்தின் தரையிறங்கும் கியரில் ஏற்பட்ட கோளாறுக்கு பறவை மோதல் காரணமாக சந்தேகிக்கப்படுகிறது.
விபத்து காட்சிகளில் இரட்டை எஞ்சின் விமானம் தரையிறங்கும் கியர் இல்லாமல் முவானில் தரையிறங்குவதையும், விமான நிலையத்தின் வெளிப்புற விளிம்பில் உள்ள சுவரில் மோதி வெடித்தமையும் காட்டப்படுள்ளது.
விரைந்து செயற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணிகளை மேற்கொண்டனர். யோன்ஹாப்பின் கூற்றுப்படி, இரண்டு பயணிகள் மற்றும் ஒரு பணியாளர் உள்ளிட்ட மூவரை மீட்புக் குழுக்கள் காப்பாற்றியுள்ளனர்.
தென் கொரியாவின் தெற்கு ஜியோல்லா மாகாணத்தில் உள்ள ஒரு முக்கிய பிராந்திய மையமான தென்மேற்கு கடலோர விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி காலை 9:07 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது.
தொடர்ச்சியான அரசியல் நெருக்கடியின் மத்தியில், நாட்டின் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்ட தற்காலிக ஜனாதிபதி சோய் சாங்-மோக், முழு மீட்பு முயற்சிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 25ஆம் திகதி கஜகஸ்தானின் அக்டாவ் அருகே அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 38 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தென் கொரியாவில் இந்த பயங்கரமான விமான விபத்து ஏற்பட்டது.
செச்சென் தலைநகர் க்ரோஸ்னிக்கு செல்லும் வழியில் ரஷ்ய வான் பாதுகாப்பிலிருந்து விமானம் சுடப்பட்டதாகவும், அதை திசைதிருப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் பல தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், நேற்று இரவு செயிண்ட் ஜோன்ஸிலிருந்து கனடாவின் ஹாலிஃபாக்ஸ் வந்த விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட பிரச்சனையால், ஓடுபாதையில் இருந்து சறுக்கி பகுதியளவு தீப்பிடித்ததால், விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.