வெளிநாட்டிலுள்ள தமிழ் ஊடகவியலாளருக்கு நீதிமன்ற பிடியாணை
முன்னாள் ஜனாதிபதி கிழக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸாரால் குற்றம் சுமத்தப்பட்ட பால் பண்ணையாளர்கள் உட்பட இருபத்தேழு பேரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது, கடந்த வழக்கு விசாரணையின்போதும் நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் வெளிநாட்டில் உள்ள தமிழ் ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரனுக்கு எதிராக நீதவான் மதுஜலா கேதீஸ்வரன் பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாடாளுமன்ற அமர்வு தினம் என்பதால் நீதிமன்றத்திற்கு வர முடியாது என சட்டத்தரணிகள் ஊடாக காரணங்களை தெரிவித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் மற்றும் மற்றுமொரு நபரை அடுத்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பித்த நீதவான், ஏனைய 27 சந்தேகநபர்களையும் தலா ஒரு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 21, 2025 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி மட்டக்களப்பு செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தின் 149ஆவது ஆண்டு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்ற நிலையில், மயிலத்தமடு மாதவனைப் பாற்பண்ணையாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் அவர் பயணித்த பாதையை மறித்து போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
ஜனாதிபதி கிழக்கிற்கு விஜயம் செய்யும் காலப்பகுதியில் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்கப்படவில்லை என்றாலும், வீதிகளை மறித்து பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்துவதற்கு தடை விதித்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் பொலிஸார் அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் தாய்மார்களை பொலிஸ் அதிகாரிகள் தாக்குவதையும் பிரதேச ஊடகவியலாளர்கள் காணொளி பதிவு செய்திருந்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பி. அரியேந்திரன், எஸ். யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், அக்கட்சியின் அமைப்பாளர் டி. சுரேஷ், ஊடகவியலாளர்களான புண்யமூர்த்தி சசிகரன், வி. கிருஷ்ணகுமார் மற்றும் மயிலத்தமடு மாதவணை பால் பண்ணையாளர்கள் உட்பட 34 பேரிடம் ஏறாவூர் பொலிஸார் 2023ஆம் ஆண்டு வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தனர்