அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு – தப்பிச் சென்ற கார் கண்டுபிடிக்கப்பட்டது

அம்பலாங்கொடை நகரசபையின் பிரதான நூலகத்திற்கு முன்பாக இன்று (04) காலை துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்கள் தப்பிச் சென்ற கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அஹுங்கல்ல பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, கரந்தெனிய எகொடவெல சந்திப்பில் சந்தேக நபர்களால் கைவிடப்பட்ட நிலையில் கார் கண்டுபிடிக்கப்பட்டது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்திய பின்னர் எகொடவெல வழியாக பயணித்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அம்பலாங்கொடை நகரசபையின் பிரதான நூலகத்திற்கு முன்பாக இன்று காலை 10.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
காரில் வந்த ஒரு கும்பல் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை குறிவைத்து, துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றது.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அந்த நபர், சிகிச்சைக்காக பலபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது முகம் மற்றும் மார்பில் நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த நபர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, போரம்ப பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் அம்பலாங்கொட நகர சபைக்கான போட்டியில் அந்த நபர் தோல்வியடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், அவர் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் ‘கரந்தெனிய சுத்தா’ என்ற குற்றவாளியின் மைத்துனர் என்றும் பொலிஸார்
தெரிவித்தனர்.
இந்த கொலைக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.
தென் மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜெயலத்தின் அறிவுறுத்தலின் பேரில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
