போரினால் பாதிக்கப்பட்ட ரோஹிங்கியாக்கள் குற்றவாளிகள் போல் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு

போரினால் பாதிக்கப்பட்ட ரோஹிங்கியாக்கள் குற்றவாளிகள் போல் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு

இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகள் தேசிய மற்றும் சர்வதேச சட்டங்களை புறக்கணித்து, சமூக நலன்களை கூட வழங்காது குற்றவாளிகள் போல் நடத்தப்படுவதை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டறிந்துள்ளது.

முல்லைத்தீவு கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, தமிழ் மீனவர்களால் ஒரு மாதத்திற்கு முன்னர் மீட்கப்பட்ட 18 வயதுக்குட்பட்ட 57 பேர் உள்ளிட்ட 116 பேர் தற்போது முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, முல்லைத்தீவு வைத்தியசாலையில் கடந்த 20ஆம் திகதி பிறந்த குழந்தை ஒன்றும் அவர்களுடன் இணைந்துள்ளது.

“அகதிகள் அவர்களுடன் தொடர்புடைய மையங்களில் தங்கவைக்கப்படவில்லை. அது இராணுவ முகாம். அகதிகளில் பெண்களும் அதிக எண்ணிக்கையிலான சிறுவர்களும் உள்ளனர். அவர்களுக்கு சத்தான உணவு, அவசியமான வைத்திய உதவிகள் மற்றும் மற்றும் பிற நலன்புரி வசதிகள் ஆகியவற்றை வழங்குவதற்கான அந்த முகாமின் இயலுமை என்ன என்பது உண்மையான கேள்வி.

புலம்பெயர்ந்த மக்களை சரியான முறையில் கவனிப்பதற்கு இலங்கை அரசாங்கம் எமது சட்டத்தின் கீழும் சர்வதேச சட்ட விதிகளின் கீழும் கட்டுப்பட்டிருக்கிறது” என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி கெஹான் குணதிலக்க தெரிவிக்கின்றார்.

மனிதாபிமான சட்டங்களை மீறுதல்

இலங்கையின் எல்லைக்குள் பிரவேசிக்கும் எந்தவொரு நபரையும் தற்போதுள்ள சட்ட கட்டமைப்பிற்குள் கையாள்வதற்கு இலங்கை அரசாங்கம் கட்டுப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

“இந்த அகதிகள் தொடர்பாக, ICCPR (சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை) சட்டத்தின் கீழ், இந்த அகதிகள் குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் பொறுப்பு உள்ளது. குறிப்பாக சிறுவர்கள் மிகவும் கவனமாக தேடிப்பார்க்க வேண்டும். குழந்தைகளின் நலன் மற்றும் பாதுகாப்பு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கொள்கையை மீறும் வகையில் செயல்பட முடியாது. உண்மையில், அந்தக் கொள்கையின் கீழ், குழந்தைகளை சரியாகப் பாதுகாக்கவும், பராமரிக்கவும், போசாக்கை வழங்கவும் அதே போல் எந்தவொரு உடல் மற்றும் மன ரீதியான பாதிப்பும் இன்றி வாழக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்” என ஆணையாளர் குணதிலக சுட்டிக்காட்டுகின்றார்.

அரசாங்கம் என்ற ரீதியில் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அந்த கோட்பாடுகளுக்கு அமைய இலங்கையின் குடிமக்கள் அல்லது குழந்தைகளை மாத்திரம் கையாள இலங்கை கடமைப்பட்டிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

“நமது நில எல்லைகளுக்கு உட்பட்ட எவருக்கும் அந்த உரிமையும் பாதுகாப்பும் இருக்க வேண்டும். எளிமையாகச் சொல்வதானால், இன்று சர்வதேச அளவில் நடைமுறையில் இருக்கும் பல சட்டங்கள் அந்தந்த நாட்டின் எல்லைக்குள் மாத்திரம் செல்லுபடியானதல்ல, ஒவ்வொரு மனிதனுக்கும் அந்த சட்டப் பாதுகாப்பு இருக்க வேண்டும். நான் நினைக்கிறேன். நிலைமையைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,” என சட்டச் சூழல் குறித்தும் பேராசிரியர் கெஹான் குணதிலக்க விளக்கமளித்தார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு, குற்றம் சாட்டப்பட்டவர்ளுக்கான கவனிப்பு

இவ்வாறான மக்களை தடுத்து வைப்பதற்கு ஏற்ற இடம் இதுவல்லவென விமானப்படை முகாம் வளாகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டபோது அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நோய்வாய்ப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கர்ப்பிணித் தாய்மார்கள் இருக்கிறார்கள். எல்லோரும் உடலளவிலும் மனதளவிலும் பலவீனமானவர்கள். முகாம் வாழ்க்கை அவர்களுக்கு ஏற்றதல்ல என்பதே எங்கள் கருத்து. குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைப்பதில்லை. அவர்கள் எந்த சூழ்நிலையிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் கூட்டமே. அவ்வாறு வந்தவர்களை தொடர்ந்தும் தடுத்து வைப்பது எந்தளவுக்கு பொருத்தமானது என்ற கேள்வி எமக்கு உள்ளது. அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள். ஆனால் அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களாகவே கருதப்படுகிறார்கள்.”

முல்லைத்தீவு விமானப்படைத் தளத்தில் ரோஹிங்கியா அகதிகள் கடுமையான உடல் மற்றும் மன அழுத்தத்திற்கு உள்ளானால், அவர்களை மனிதாபிமானத்துடன் கையாளுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த குணதிலக, ஆணைக்குழு, இதில் ஏற்கனவே தலையீடு செய்திருப்பதாக கூறியுள்ளார்.

“கண்டிப்பாக சொல்லியிருக்கிறோம். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் ஆணைக்குழு முன் அழைத்து, கடந்த 31ஆம் திகதி, இந்த அகதிகள் மீது மிகவும் பொறுப்புடனும், மனிதாபிமானத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தோம். பார்க்கையில் பல குறைகளை காண முடிகிறது”, மனிதாபிமானத்துடன் செயல்படுவது அனைத்து அரசு அதிகாரிகளின் பொறுப்பு என்பது குணதிலகவின் கருத்தின் ஊடாக வெளிப்படுகிறது.

நாடு கடத்த வேண்டாம்

“உண்மையில், இங்கு இரண்டு தீவிரமான பிரச்சினைகள் உள்ளன. ஒன்று குழந்தைகள் மற்றும் பெண்கள் பிரச்சினை, ஏனெனில் குழந்தைகள் மற்றும் பெண்கள் சமூக அல்லது சட்டப் பாதுகாப்புக்கு உரிமையுள்ள உயர்மட்ட குழுக்கள். இது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை என்று நான் முதலில் சொன்னேன். இரண்டாவது, இந்த அகதிகளை அவர்களது சொந்த நாட்டிற்கு அதாவது மியன்மாருக்கு திருப்பி அனுப்புவதில் உள்ள அபாயம். ஏனென்றால் அவர்கள் சொந்த நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்கள். எனவே, அவர்களை நாடு கடத்தாமல் இருக்க வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஆணைக்குழு தனது நிலைப்பாட்டை தெரிவித்து ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக கெஹான் குணதிலக்க தெரிவிக்கின்றார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் குழுவொன்று கடந்த வருடம் டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ரோஹிங்கியா அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு விமானப்படைத் தளத்தின் வளாகத்திற்குச் சென்ற போதிலும், விமானப்படைத் தளத்தின் தலைவர் ஆணைக்குழுவின் அதிகாரிகளை அனுமதிக்கவில்லை.

ஆணைக்குழுவின் விசாரணைக் குழுவை முகாமுக்குள் அனுமதிக்கக் கூடாது என மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதாகவும், எனவே அமைச்சிடம் அனுமதி பெற்று வருமாறும் அவர் தெரிவித்திருந்தார். குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் ஏனைய தரப்பினர் ஆணைக்குழுவின் முன்னிலையில் விளக்கமளிக்கப்பட்டதன் பின்னரே தமக்கு அனுமதி கிடைத்ததாக ஆணையாளர் கெஹான் குணதிலக்க தெரிவித்தார்.

“கடந்த 9ஆம் திகதி ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று முல்லைத்தீவு விமானப்படைத் தளத்திற்குச் சென்று ரோஹிங்கியா அகதிகளை சந்தித்து நிலைமைகளை கேட்டறிந்தது. நான் உங்களிடம் சொன்ன பல விடயங்களை நாங்கள் அங்கே கேட்கவும் பார்க்கவும் முடிந்தது.

தற்போது அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். பிற தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஒருங்கிணைத்து மிக விரைவான மற்றும் தேவையான நலன்புரி வேலைத்திட்டத்தை தயாரிப்போம் என நம்புகிறோம். இது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொறுப்பு மற்றும் எமது எல்லைக்கு உட்பட்ட உரிமையாகும்.” என கெஹான் குணதிலக்க வலியுறுத்தினார்.

புலம்பெயர்ந்தோர் நலனுக்கான கூட்டங்களுக்கு இடையில் புலம்பெயர்ந்தவர்களை துன்புறுத்துதல்

இதேவேளை, கடந்த வருடம் ஒக்டோபர் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் கொழும்பில் இடம்பெற்ற மனித கடத்தலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் வலியுறுத்தப்பட்ட விடயங்களில் ஒன்று. ‘பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் வழிமுறைகளை மேம்படுத்துதல், கண்காணிப்பு மற்றும் விரைவான தங்குமிடம் மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குதல்,’ ஆகும். தென்கிழக்கு ஆசியா முழுவதும் கட்டாயக் குற்றமாக்கலுக்கு ஆள் கடத்தலைப் பயன்படுத்துவதை எதிர்த்துப் போராடுவதில் அதிக கவனம் செலுத்துவது குறித்தும், இதுபோன்ற குற்றச் செயல்களைத் தடுப்பதற்குத் தேவையான பின்னணியைத் தயாரிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சினால் கட்டுப்படுத்தப்படும் மனித கடத்தல் தடுப்பு பணிக்குழுவானது (National Anti -Human Trafficking Task Force – NAHTTF) அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சின் பங்களிப்புடன் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (International Organization for Migration – IOM) ஆகியவற்றினால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த செயலமர்வில் கம்போடியா, தாய்லாந்து மற்றும் ரோஹிங்கியா அகதிகள் வருகைத்தந்த மியன்மார் ஆகிய நாடுகளும் பங்குபற்றியிருந்தன.

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சுக்கு மேலதிகமாக, வெளிவிவகார அமைச்சு, நீதித்துறை, பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்களம், குடிவரவு, குடியகல்வு திணைக்களம் மற்றும் மாகாண சபைகளின் கீழ் உள்ள சில நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.

Share This