அமெரிக்காவில் விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பின

அமெரிக்காவில் விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பின

அமெரிக்காவில் விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.

அரசாங்க முடக்கத்தின் போது அறிமுகப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருவதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து நிர்வாகம் விடுத்த அறிவிப்பை தொடர்ந்து, அமெரிக்காவில் விமானங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன.

இதன்படி,  திங்கட்கிழமை காலை ஆறு மணி முதல் விமான நிறுவனங்கள் தங்கள் வழமையான அட்டவணையின் கீழ் விமானங்களை இயக்க முடியும் என மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டதன் காரணமாக பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, 40 முக்கிய விமான நிலையங்களில் விமானங்களைக் குறைக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.

இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், எண்ணற்ற விமானங்கள் தாமதமாவதற்கும் வழிவகுத்தன.

எவ்வாறாயினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த புதன்கிழமை முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சட்ட மூலத்தில் கையெழுத்திட்டார்.

இதன் மூலம் குடியரசுக் கட்சியினருக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையே ஆறு வாரங்களாக நீடித்த மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  அரசாங்க முடக்கம் முடிவுக்கு வந்துள்ளதை தொடர்ந்து பணியாளர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனை சுட்டிக்காட்டியுள்ள அதிகாரிகள் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This