மேலும் 20 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை விரைவில் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

வெளிநாடுகளில் உள்ள மேலும் 20 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் விரைவில் நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 07 மாதங்களில் வெளிநாடுகளில் இருந்த 11 திட்டமிட்ட குற்றவாளிகள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இன்டர்போலின் உதவியுடன், தொடர்புடைய நாடுகளுடன் ஒருங்கிணைந்து குற்றப் புலனாய்வுத் துறை, விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
சர்வதேச குற்ற நடவடிக்கைகளை தடுப்பதை நோக்காக கொண்டு 1923 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பொலிஸ் துறையின் அமைப்பு இன்டர்போல் ஆகும்.
இது 184 உலக நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ளதுடன் இந்த அமைப்பு, நாடுகளின் பொலிஸாரிடையே ஒத்துழைப்பு, இயைபு ஆக்கத்தை ஏதுவாக்குகின்றது. இவ் அமைப்பின் தலைமையகம் லியான்ஸ், பிரான்சில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.