சிவப்பு அரிசியில் மோசடி – வெள்ளை அரிசி கலப்பு
(சுப்ரமணியம் நிஷாந்தன்)
சிவப்பு அரிசிக்கு சந்தையில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வெள்ளை அரிசியை சிவப்பு அரிசியுடன் கலக்கும் மோசடிகள் இடம்பெற்று வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த சில வாரங்களாக அரிசிக்கு பாரிய பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் அதிகமாக நுகரும் நாட்டு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஏனைய அரிசிகளை கொள்வனவு செய்வதில் மக்கள் நாட்டம் காட்டினர்.
அரிசி பற்றாக்குறையை போக்க இந்தியாவில் இருந்தும் ஒரு இலட்சத்தி 50ஆயிரத்துக்கும் அதிகமான மெற்றிக் தொன் அரிசியை அரசாங்கம் இறக்குமதி செய்தது. என்றாலும், நாட்டில் சிவப்பு அரிசியை உண்ணும் மக்கள் தொடர்ந்து சிவப்பு அரிசிக்கான கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள சில கறுப்புச் சந்தை அரிசி விற்பனையாளர்கள் முற்பட்டுள்ளனர். குறிப்பாக வெள்ளை அரிசியுடன் சிவப்பு அரிசியை குறிப்பிட்ட வீதம் கலந்து சிவப்பு அரிசியாக விற்பனை செய்கின்றனர். அதேபோன்று வெள்ளை அரிசியை செயற்கையாக சிவப்பு அரிசியாக்கும் முயற்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து சில சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றிவளைப்புகளில் வெள்ளை அரிசியுடன் சிவப்பு அரிசியை கலந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டுள்ளது. சிவப்பு அரிசிக்கான பற்றாக்குறையை வர்த்தக நோக்கில் இலாபமடைய இவ்வாறான முயற்சிகளை வர்த்தகர்கள் மேற்கொண்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மோசடியை குறிவைத்து சோதனைகளை நடத்த பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இவ்வாறான மோசடியில் ஈடுபட்டுள்ள சிலருக்கு அதிகபட்சமாக ஒரு மில்லியன் ரூபாவரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.