இலங்கையின் திறன் மேம்பாட்டிற்கு ஆதரவளிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் இணக்கம்
இலங்கையின் திறன் மேம்பாட்டிற்கு ஆதரவளிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸ் (Paul Stephens)கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இடையே அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கு புதிய அரசாங்கத்தின் நோக்கங்கள், கொள்கைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.
நஷ்டத்தில் இயங்கும் பொதுத் தொழில்களை விற்பனை செய்வதற்குப் பதிலாக,பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் அந்தத் தொழில்களை மக்கள் பயன்பெறும் வகையில் சீரமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் புதிய அரசாங்கத்தின் கொள்கைகளைப் பாராட்டியதுடன், அவுஸ்திரேலியா மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் அந்தக் கொள்கைகளின்படி இலங்கையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து அமைச்சரிடம் கேட்டறிந்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், இரத்தினங்கள் மற்றும் நகைகள், படகு தயாரிப்பு, ஒட்டோ மொபைல் (வாகன தயாரிப்பு) போன்ற துறைகளில் பல முதலீட்டு வாய்ப்புகள் உள்ளதாகவும், அதற்காக அவுஸ்திரேலிய முதலீட்டாளர்கள் அழைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் திலகா ஜய சுந்தர, மேலதிக செயலாளர் சமிந்த பத்திராஜா, அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் முதன்மை செயலாளர் ஷரினி மெக்வென் ஆகியோர் கலந்துகொண்டனர்.