புதிய அரசியலமைப்புக்கான  தேவை இலங்கையில் உள்ளதா?

புதிய அரசியலமைப்புக்கான தேவை இலங்கையில் உள்ளதா?

இலங்கை குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்டு ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இந்த நீண்ட காலப் பயணத்தின் பின்னரும், நாட்டின் அரசியல் அமைப்பும் ஆட்சிமுறையும் எதிர்கொண்டுவரும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு நிலையானத் தீர்வுகள் இன்னமும் எட்டப்படவில்லை.

அதிகாரத்தின் மையப்படுத்தல், ஜனநாயக நிறுவனங்களின் பலவீனம், இனங்களுக்கு இடையிலான நம்பிக்கையின்மை, சமூக அநீதி, பொருளாதார சமத்துவமின்மை மற்றும் பொறுப்புக்கூறல் இல்லாத ஆட்சி ஆகியன தொடர்ந்தும் நாட்டை சவாலுக்கு உள்ளாக்கி வருகின்றன.

இலங்கையின் அரசியலமைப்புச் சரித்திரத்தைப் பார்த்தால், 1972 மற்றும் 1978 அரசியலமைப்புகள் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தாலும், அவை மக்களின் ஜனநாயக எதிர்பார்ப்புகளை முழுமையாகப் பூர்த்தி செய்யத் தவறியுள்ளன.

Constitution. Illustration: Ratna Sagar Shrestha.THT

குறிப்பாக 1978ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை, அதிகாரங்களை ஒரே நபரிடம் குவித்து வைத்ததன் மூலம் ஜனநாயக நிறுவனங்களின் சுயாதீனத்தையும் நாடாளுமன்றத்தின் முக்கியத்துவத்தையும் குறைத்தது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஆரம்பத்தில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், நடைமுறையில் அது அதிகாரத் துஷ்பிரயோகம், குடும்ப ஆட்சி, ஊழல் மற்றும் அரசியல் பொறுப்பின்மைக்கு வழிவகுத்தது. கடந்த பல ஆண்டுகளாக ஏற்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் இந்த விமர்சனங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளன.

இந்தப் பின்னணியில்தான் 2022ஆம் ஆண்டு உருவான மக்கள் எழுச்சி இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. பொருளாதார நெருக்கடி உச்சத்தை எட்டிய காலகட்டத்தில், இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து அரசியல் மாற்றத்திற்காக குரல் கொடுத்தனர்.

இது வெறும் எரிபொருள், மின்சாரம் அல்லது அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறைக்கு எதிரானப் போராட்டமாக மட்டுமல்லாமல், பல தசாப்தங்களாக நிலவி வந்த அரசியல் கலாசாரத்திற்கெதிரான மக்கள் தீர்ப்பாகவும் அமைந்தது.

குறித்த போராட்டம் வெளிப்படுத்திய மிக முக்கியமான செய்தி, மக்கள் இனிமேல் அதிகாரத்தின் மையப்படுத்தலையும், குடும்ப ஆட்சியையும், ஊழலையும் ஏற்கத் தயாராக இல்லை என்பதாகும். அதிகாரம் மக்களிடமிருந்து உருவாகிறது. எனவே, அது மக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியது அவசியம் என்ற ஜனநாயகக் கோட்பாட்டை அந்தப் போராட்டம் மீண்டும் வலியுறுத்தியது.

இந்த மக்கள் எழுச்சியின் அரசியல் தாக்கம் 2024ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தல்களிலும் தெளிவாகப் பிரதிபலித்தது. பழைய அரசியல் நடைமுறைகளை நிராகரித்த வாக்காளர்கள், மாற்றத்திற்கான வாக்குறுதிகளை முன்வைத்த புதிய அரசியல் சக்திகளுக்கு ஆதரவு வழங்கினர். குறிப்பாக அரசியலமைப்புச் சீர்திருத்தம், ஊழல் ஒழிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவை தேர்தல் விவாதங்களின் மையமாக மாறின.

இந்நிலையில், இலங்கைக்கு வெறும் அரசியலமைப்புத் திருத்தங்கள் மட்டுமே போதுமானதாக இருக்காது. ஏனெனில், கடந்த காலத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. எனவே, நாட்டிற்கு தேவையானது “சீர்திருத்த அரசியலமைப்பு” அல்ல மாறாக ஒரு “மாற்றத்தை ஏற்படுத்தும் அரசியலமைப்பு” ஆகும்.

அத்தகைய புதிய அரசியலமைப்பின் முதல் நோக்கம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்து, நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும். அதிகாரங்கள் ஒரே நபரிடம் குவியாமல், பல நிறுவனங்களுக்கிடையில் சமநிலையுடன் பகிரப்பட வேண்டும். இதன்மூலம் அதிகாரத் துஷ்பிரயோகத்தைத் தடுக்க முடியும்.

அதேவேளை, நீதித்துறையின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். எந்த அரசாங்கமும் அல்லது அரசியல் சக்தியும் சட்டத்திற்கு மேலானதாக இருக்க முடியாது என்பதைக் காட்டும் வகையில் அரசியலமைப்பின் மேலாதிக்கம் தெளிவாகப் பாதுகாக்கப்பட வேண்டும். நீதிமன்றங்களுக்கு அரசாங்க நடவடிக்கைகள் மற்றும் சட்டங்களை ஆய்வு செய்யும் அதிகாரம் வழங்கப்படுவது ஜனநாயக பாதுகாப்பின் முக்கிய அங்கமாகும்.

புதிய அரசியலமைப்பு மனித உரிமைகள் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். கருத்துரிமை, மதச்சார்பற்ற சுதந்திரம், சமத்துவம், சமூக நீதி, பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் போன்றவை வெறும் அறிவிப்புகளாக இல்லாமல், நீதிமன்றங்கள் மூலம் நடைமுறைப்படுத்தக்கூடிய உரிமைகளாக இருக்க வேண்டும்.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வை உருவாக்குவதிலும் புதிய அரசியலமைப்புக்கு முக்கிய பங்கு உள்ளது. அதிகாரப் பகிர்வு என்பது ஒரு அரசியல் சலுகை அல்ல. அது பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தில் ஜனநாயக நிர்வாகத்தின் அடிப்படைத் தேவையாகும். மாகாணங்கள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளுக்குப் பொருத்தமான அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரங்கள் வழங்கப்படுவதன் மூலம் மக்கள் தங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் முடிவுகளில் நேரடியாகப் பங்கேற்கும் வாய்ப்பு உருவாகும்.

குறிப்பாக, இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களினதும் கருத்துக்களையும் பங்களிப்புகளையும் உள்ளடக்கியதாகவே புதிய அரசியலமைப்பு அமைய வேண்டும் என்பது தமிழ் மக்களின் நீண்டகால நிலைப்பாடாக இருந்து வருகின்றது. கடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட 1972 மற்றும் 1978 அரசியலமைப்புகள் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுடன் போதுமான கலந்துரையாடல்கள் இன்றி உருவாக்கப்பட்டதாக பல அரசியல் ஆய்வாளர்களும் சமூக பிரதிநிதிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அந்த அரசியலமைப்புகளின் பல அம்சங்கள் சிறுபான்மை மக்களிடையே அரசியல் அதிருப்தியையும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தின. குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகள் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான எதிர்பார்ப்புகள் புறக்கணிக்கப்பட்டதாகக் கருதப்பட்ட சூழலில், நாட்டில் இன முரண்பாடுகள் தீவிரமடைந்தன. பின்னர் சில தமிழ் இளைஞர் இயக்கங்கள் ஆயுதப் போராட்டப் பாதையைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணிகளில் இதுவும் ஒன்றாகக் குறிப்பிடப்படுகின்றது.

இந்த வரலாற்றுப் படிப்பினைகள் மீண்டும் நிகழக்கூடாது என்பதற்காகவே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் போது அனைத்து இனங்களும், மதங்களும், பிராந்தியங்களும் பிரதிநிதித்துவம் பெறும் பரந்த ஆலோசனைச் செயல்முறை முன்னெடுக்கப்பட வேண்டும். மக்கள் பங்கேற்பு, அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு, சிவில் சமூக அமைப்புகளின் கருத்துக்கள் மற்றும் சிறுபான்மை சமூகங்களின் அபிலாஷைகள் ஆகிய அனைத்தும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், புதிய அரசியலமைப்பொன்றை தமது ஆட்சிக்காலத்தில் கட்டாயம் கொண்டுவருவதாக தேர்தல் மேடைகளில் உறுதியளித்திருந்தது. நல்லாட்சி, ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் மக்களின் அதிகாரத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் ஒரு பகுதியாக இந்த வாக்குறுதி முன்வைக்கப்பட்டது.

ஆனால், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளை நெருங்கும் நிலையிலும், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் இதுவரை தென்படவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. அரசியலமைப்பு உருவாக்கம் என்பது நீண்டகால ஆலோசனைகள், சட்ட வரைவுகள், நாடாளுமன்ற விவாதங்கள் மற்றும் மக்கள் அங்கீகாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய சிக்கலான செயல்முறையாகும். எனவே, இந்தப் பணியை தாமதமின்றி ஆரம்பிப்பது அவசியமாகியுள்ளது.

இலங்கையின் அரசியல் நடைமுறையைப் பொறுத்தவரை, ஒரு அரசாங்கம் தனது பதவிக் காலத்தின் மூன்றரை ஆண்டுகளை கடந்தவுடன் அடுத்த பொதுத் தேர்தலை மையப்படுத்திய அரசியல் நடவடிக்கைகள் தீவிரமடையத் தொடங்குகின்றன. அதனால், ஆட்சியின் இறுதிக் காலத்தில் இத்தகைய முக்கியமான அரசியலமைப்பு மாற்றங்களை முன்னெடுப்பது மிகவும் கடினமாக மாறக்கூடும்.

மேலும், இலங்கையின் தேசிய அரசியலில் இன அரசியல் மற்றும் பேரினவாத சிந்தனைகள் இன்னமும் தாக்கத்தை செலுத்தும் சக்திகளாகவே உள்ளன. பல்வேறு அரசியல் முடிவுகள் தேர்தல் கணக்கீடுகளின் அடிப்படையில் எடுக்கப்படும் சூழலில், புதிய அரசியலமைப்புக்கான துணிச்சலானத் தீர்மானங்களை எடுப்பது காலப்போக்கில் மேலும் சிரமமாகலாம்.

எனவே, தற்போதைய அரசாங்கத்துக்கு நடைமுறையில் இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே பயனுள்ள காலமாக எஞ்சியுள்ளதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். அந்தக் காலப்பகுதிக்குள் அரசியலமைப்புத் தொடர்பான ஆலோசனைகள், வரைவுப் பணிகள் மற்றும் சட்ட நடைமுறைகள் அனைத்தும் இறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இல்லாவிட்டால், பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் அனைத்து இன மக்களினதும் ஆதரவுடனும் பெரும் எதிர்பார்ப்புடனும் ஆட்சிக்கு வந்துள்ள இந்த அரசாங்கம் தனது முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றத் தவறியதாக மக்கள் மத்தியில் விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடலாம். அதுவே அடுத்தத் தேர்தலில் அரசாங்கத்தின் மக்கள் ஆதரவில் குறிப்பிடத்தக்க சரிவை ஏற்படுத்தும் காரணியாகவும் அமையக்கூடும்.

இதேவேளை, எதிர்கால அரசியலமைப்பு ஒரு நிலையான சட்ட ஆவணமாக மட்டுமல்லாமல், காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளக்கூடிய “வாழும் ஆவணமாக” அமைய வேண்டும். சமூக மாற்றங்கள், தொழிநுட்ப வளர்ச்சிகள், பொருளாதார சவால்கள் மற்றும் புதிய ஜனநாயக எதிர்பார்ப்புகளுக்கு பதிலளிக்கும் திறன் அதற்கு இருக்க வேண்டும்.

இன்றைய இலங்கை ஒரு வரலாற்றுச் சந்திப்புப் புள்ளியில் நிற்கிறது. கடந்த காலத்தின் தோல்விகளையும் தவறுகளையும் மீண்டும் தொடர்வதா, அல்லது புதிய ஜனநாயகப் பாதையைத் தேர்ந்தெடுப்பதா என்ற முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மக்கள் எழுச்சியும் தேர்தல் முடிவுகளும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ள செய்திதான் நாட்டிற்கு புதிய அரசியலமைப்பொன்று அனைத்தின மக்களினதும் பங்களிப்புடன் அவசியம் என்பது.

எனவே, மக்களின் இறையாண்மை உண்மையாக நிலைநிறுத்தப்படும், அதிகாரம் பொறுப்புக்கூறலுடன் செயல்படும், சமூக நீதி உறுதிப்படுத்தப்படும், அனைத்து இனங்களும் சம உரிமையுடன் வாழும் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணியை இந்த ஆரம்பிக்க வேண்டும் என்பதே ஜனநாயகத்தையும் மக்கள் ஆட்சியையும் நேசிப்பவர்களின் எதிர்பார்ப்பாகும்.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )