உலகம் சந்திக்கப் போகும் மிகப்பெரிய ஆபத்து – எமனாகும் வெப்பநிலை  உயர்வு ; ஐ.நா. எச்சரிக்கை 

உலகம் சந்திக்கப் போகும் மிகப்பெரிய ஆபத்து – எமனாகும் வெப்பநிலை  உயர்வு ; ஐ.நா. எச்சரிக்கை 

ஐக்கிய நாடுகள் சபை (United Nations) வெளியிட்டுள்ள உலகளாவிய காலநிலை மாற்ற தொர்பான அண்மைய அறிக்கை, உலகம் ஒரு முக்கியமான மற்றும் அபாயகரமான காலநிலை கட்டத்திற்குள் நுழைந்துக் கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது.

அறிக்கையின் படி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலக வெப்பநிலை இதுவரை பதிவான வரலாற்று அளவுகளை விட அதிகமாக உயரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமையானது, மனித நடவடிக்கைகள் காரணமாக ஏற்பட்டது எனக் கூறியுள்ள ஐ.நா., காலநிலை மாற்றத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதில் பாரிய சிக்கல்கள் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த மாற்றத்தை சமநிலைப்படுத்தும் இயற்கை அமைப்புகளின் திறனை விட காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் காரணிகள் அதிகமாக இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனால் உலகளாவிய சுற்றுச்சூழல் சமநிலை மிகப்பெரிய ஆபத்தில் உள்ளது.

ஐ.நாவின் அறிக்கையின் பிரகாரம் உலக வெப்பநிலை தற்காலிகமாக 1.5°C வரம்பை மீறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இது பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் (Paris Climate Agreement) இலக்குகளுக்கு நேரடி சவாலாகக் கருதப்படுகிறது.

கடுமையான வெப்ப அலைகள் அதிகரிக்கும் எனவும், குறிப்பாக நகர்ப்புறங்களில் வெப்பத் தாக்கம் (urban heat island effect) அதிகமாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், கடல்மட்ட உயர்வு தொடர்ச்சியாக அதிகரிக்கும் நிலையில், குறைந்த உயரம் கொண்டத் தீவுகள் மற்றும் கடற்கரை நகரங்கள் பெரும் அபாயத்தை சந்திக்கும் எனவும் உணவு பாதுகாப்பு, நீர் வளங்கள் மற்றும் சுகாதார அமைப்புகள் அனைத்தும் ஒரே நேரத்தில் அழுத்தத்திற்கு உள்ளாகும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலக வெப்பநிலை உயர்வின் அடிப்படை காரணிகள்

உலகளாவிய ரீதியில் வெப்பநிலை உயர்வின் பின்னணியில் பல மனிதச் செயல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

முதலாவதாக, எரிசக்தி உற்பத்தியில் நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற எரிபொருட்களின் அதிகப் பயன்பாடு வளிமண்டலத்தில் அதிக அளவிலான கார்பன் டைஆக்சைடை சேர்க்கிறது. இது பசுமை இல்ல விளைவை (greenhouse effect)  அதிகரிக்கிறது.

இரண்டாவதாக, உலகளாவிய தொழிற்துறை வளர்ச்சி, குறிப்பாக உற்பத்தி மற்றும் கட்டுமான துறைகள், மிகப்பெரிய அளவில் கார்பன் வெளியீட்டை உருவாக்குகின்றன.

மூன்றாவதாக, காடுகள் அழிப்பு (deforestation) காரணமாக கார்பனை உறிஞ்சும் இயற்கை சமநிலை குறைகிறது. இதனால் வளிமண்டலத்தில் வெப்பம் அதிகமாக தங்குகிறது.

மேலும், வேகமான நகரமயமாக்கல், வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு மற்றும் நிலப் பயன்பாட்டு மாற்றங்கள் அனைத்தும் இணைந்து இந்தப் பிரச்சினையை தீவிரப்படுத்துகின்றன.

இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தான் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் செய்துக்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை எந்தவொரு நாடும் முறையாக பின்பற்றுவதில்லை. முன்னுதாரணமாக செயல்பட வேண்டிய அமெரிக்காவே இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிவிட்டது.

விளைவுகளின் பல்முக தாக்கங்கள்

உலக வெப்பநிலை உயர்வு பனிமலை உருகுதல் வேகத்தை அதிகரிக்கிறது. இதன் நேரடி விளைவாக கடல் மட்டம் உயர்ந்து, கடற்கரைப் பகுதிகள் மெதுவாக நீரில் மூழ்கும் அபாயம் உருவாகிறது.

அதேபோல், உயிரினங்களின் வாழிடங்கள் அழிந்துடன், தற்போதைய சூழவில் பல இனங்கள் அழிவின் ஆபத்தில் உள்ளன. கடல் சூழல் அமைப்புகளும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.

பொருளாதார தாக்கங்கள்

விவசாயம் இந்த மாற்றத்தால் மிக அதிகமாக பாதிக்கப்படும் துறையாகும். பருவமழை மாற்றம் காரணமாக உணவு உற்பத்தி குறையும், இதனால் உணவுப் பொருட்களின் விலை உயர்வு ஏற்படும் என்பதுடன், கடுமையான உணவுப் பற்றாக்குறையும் ஏற்படும்.

அத்துடன், இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் சேதங்கள் அரசுகளுக்குப் பெரும் நிதிச் சுமையை உருவாக்கும். காப்பீட்டு துறை மற்றும் கட்டமைப்புத் துறைகளும் இதனால் பாதிக்கப்படுகின்றன.

சமூக தாக்கங்கள்

வெப்பநிலை அதிகரிப்பால் மனித வாழ்க்கை முறையில் பெரும் மாற்றங்கள் ஏற்படும். குடிநீர் பற்றாக்குறை, வெப்ப அலை காரணமாக உயிரிழப்பு அபாயம், மற்றும் புதிய நோய்கள் பரவல் அதிகரிக்கக்கூடும். வாழ்வாதாரம் பாதிக்கப்படும் பகுதிகளில் மக்கள் இடம்பெயர்வு (climate migration) அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

பிராந்திய ரீதியான உலக விளைவுகள்

உலகின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு அளவுகளில் பாதிக்கப்படுகின்றன. ஐரோப்பா கடுமையான வெப்ப அலைகள் மற்றும் காட்டுத்தீ சம்பவங்களை எதிர்கொள்கிறது. வட அமெரிக்கா சூறாவளி மற்றும் புயல் தாக்கங்களை அதிகமாக சந்திக்கிறது. ஆப்பிரிக்கா கடுமையான வறட்சி மற்றும் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது.

லத்தீன் அமெரிக்காவில் காடுகள் அழிவு மற்றும் உயிரியல் பல்வகைமை குறைவு அதிகரிக்கிறது. ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகள் வெள்ளம், சூறாவளி மற்றும் மக்கள் இடம்பெயர்வு போன்ற சிக்கல்களை அதிகமாக எதிர்கொள்கின்றன.

தீர்வுகள் மற்றும் சர்வதேச கொள்கை நடவடிக்கைகள்

இந்த அபாயத்தைக் கட்டுப்படுத்த பலத் தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன. முதன்மையாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (renewable energy) பயன்பாட்டை உலகளவில் விரிவுபடுத்த வேண்டும். சூரிய மற்றும் காற்றாலை ஆற்றல் முக்கிய மாற்று வழிகளாக கருதப்படுகின்றன.

கார்பன் வெளியீட்டை கட்டுப்படுத்த கடுமையானச் சட்டங்கள் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்கள் தேவைப்படுகிறது. UNFCCC மற்றும் IPCC போன்ற அமைப்புகள் இதற்கான வழிகாட்டுதல்களை வழங்குகின்றன. காடுகள் பாதுகாப்பு மற்றும் மீண்டும் காடு வளர்ப்பு (reforestation) நடவடிக்கைகள் மிக முக்கியமானதாகும்.

பாரிஸ் பருவளை ஒப்பந்தத்தில் இந்த விடயங்கள்தான் அதிகமாக உள்ளடக்கப்பட்டுள்ளது. என்றாலும், அந்நிய முதலீடுகள் மற்றும் வர்த்தகம், தொழில் வளர்ச்சிக்கு இந்த ஒப்பந்தம் முட்டுக்கட்டையாக அமைவதாக பல நாடுகள் அதில் இருந்து வெளியேறியுள்ளன.

பாரிஸ் ஒப்பந்தத்தின் பிரகாரம் எந்தவொரு நாடும் செயல்படவில்லை என அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிருந்தார்.

என்றாலும், பல ஐரோப்பிய நாடுகள் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் பிரகாரம் இன்னமும் தமது செயல்பாடுகளை முன்னெடுப்பதுடன், தமது இலக்குகள் குறித்தும் அறிவிப்புகளை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றன.

தெற்காசிய நாடுகள் உலகளவில் காலநிலை மாற்றத்தால் மிக அதிகமாக பாதிக்கப்படும் பகுதிகளில் ஒன்றாகும்.

இந்தியாவில், வெப்ப அலைகள் அதிகரித்து மனித உயிரிழப்பு அபாயம் தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. பருவமழை மாறுபாடு இந்தியாவில் விவசாய உற்பத்தியை நேரடியாக பாதிப்பதுடன்,  நகரங்களில் நீர் பற்றாக்குறை மற்றும் மின்சார தொடர்பானப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

இலங்கையில், குறிப்பாக மலையகப் பகுதிகள் மற்றும் கடற்கரை பகுதிகள் அதிக அபாயத்தில் உள்ளன. தேயிலை உற்பத்தி மற்றும் விவசாயம் வெப்பநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுவதாக பல ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. மண்சரிவு, வெள்ளம் உட்பட பல இயற்கை அனர்த்தங்கள் மலையகப் பகுதியில் காலநிலை மாற்றத்தால் தொடர்ச்சியாக ஏற்படுகின்றன. கடல் மட்ட உயர்வு காரணமாக கடற்கரை சமூகங்கள் இடம்பெயர வேண்டிய நிலை உருவாகலாம் என இலங்கை விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

காலநிலை மாற்றமானது இந்தியா மற்றும் இலங்கையில் பொருளாதார வளர்ச்சிக்கும் சமூக நிலைத்தன்மைக்கும் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

எனவே, ஐ.நா. வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, உலகம் ஒரு முக்கியமான திருப்புமுனையில் இருப்பதை தெளிவாக காட்டுகிறது. காலநிலை மாற்றம் இனி எதிர்கால அபாயமல்ல  அது தற்போதைய நிஜம்.

காலநிலை மாற்றம் தொடர்பில் உலக நாடுகள் உடனடி, ஒருங்கிணைந்த மற்றும் அறிவியல் அடிப்படையிலான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், அடுத்த சில ஆண்டுகளில் உலகம் வரலாற்றில் இல்லாத அளவிலான காலநிலை நெருக்கடியை சந்திக்கும் அபாயம் உள்ளது.

சு.நிசாந்தன்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )