தியவன்னத் தவளைகளும் உலகப் போர் ஆபத்தும் ; 2022 இன் படிப்பினைகளை மறந்ததா இலங்கை

தியவன்னத் தவளைகளும் உலகப் போர் ஆபத்தும் ; 2022 இன் படிப்பினைகளை மறந்ததா இலங்கை

– Dharmaraja Rasmila

ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் பிராந்தியப் போர்ச் சூழல், உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தி வரும் தாக்கம் மிகப் பயங்கரமானது.

உலகளாவிய இந்த நெருக்கடி ஒருபுறமிருக்க, இலங்கையின் தற்போதைய நிலையைச் சரியாகப் புரிந்துகொள்ள நாம் 2022 ஆம் ஆண்டின் கசப்பான யதார்த்தங்களை மீண்டும் உற்றுநோக்க வேண்டியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றபோது 110 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் மதிப்பு, அவர் நாட்டை விட்டு வெளியேறும்போது 370 ரூபாவைக் கடந்து சென்றமை நம் அனைவருக்கும் நினைவிருக்கும். ஆனால், 2022 ஆம் ஆண்டில் இன்றைய நாளைப்போல உலகப் போர்களோ அல்லது சர்வதேசச் சந்தையில் பாரிய எரிபொருள் விலை அதிகரிப்போ இருந்திருக்கவில்லை. கொவிட் பெருந்தொற்றுப் பரவியது உண்மைதான் என்றாலும், அதனை உலகின் ஏனைய நாடுகள் அழுத்தங்களுக்கு மத்தியிலும் மிக அற்புதமாக மேலாண்மை செய்திருந்தன என்றே சொல்லவேண்டும்.

இந்த நிலையில், ஈஸ்டர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இலங்கையின் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்ததை நாம் ஒப்புக்கொண்டேயாகவேண்டும். இருப்பினும், 2022 இல் ஏற்பட்ட அந்தப் பொருளாதார நெருக்கடிக் காலத்தில் ஒரு கிலோ பருப்பு 700 ரூபாவுக்கும் ஒரு கிலோ சீனி 500 ரூபாவுக்கும் விற்கப்பட்டதுடன், அவை தலா ஒன்று அல்லது இரண்டு கிலோ என்ற கட்டுப்பாடுகளுடனேயே மிகக் கடினமாகப் பெறப்பட்டன. உள்நாட்டு வெங்காயத்தில் இருந்து ஒரு கட்டுக் கீரை வரை அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அனைத்தும் உச்சத்தைத் தொட்டன.

அத்துடன், வரலாறு காணாத வகையில் நான்கு வருடங்களுக்கும் மேலாக வாகன இறக்குமதி முற்றிலும் தடைப்பட்டிருந்தது.

இலங்கை வரலாற்றின் மிக மோசமான 70 சதவீதப் பணவீக்கம் அப்போதுதான் பதிவாகியது. இதற்கெல்லாம் சர்வதேசக் காரணிகள் எதுவும் இருக்கவில்லை. மாறாக, ஆட்சியாளர்களின் தவறான நிதி நிர்வாகமும் நிதி ஒழுக்கமின்மையுமே பிரதான காரணங்களாகும்.

திறந்த பொருளாதாரக் கொள்கைக்குள் நுழைந்து 48 ஆண்டுகள் கடந்த பின்னரும், இலங்கை இன்றுவரை வெறும் 6 முதல் 7 பில்லியன் டொலர் வரையிலான ஓர் ஏழ்மையான, சொற்பமான வெளிநாட்டுக் கையிருப்பைக் கொண்ட நாடாகவே நீடிக்கிறது.

அதிலும் கணிசமான பகுதி சீனாவினால் வழங்கப்பட்ட ‘சுவாப்’ (Swap) நிதியுதவியாகும். இதற்கு நேர்மாறாக, சீனாவிடம் 3 முதல் 4 ட்ரில்லியன் டொலர்களும், வியட்நாமிடம் 87 முதல் 90 பில்லியன் டொலர்களும் வெளிநாட்டுக் கையிருப்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய உலகப் போர்ச் சூழலால் சர்வதேசச் சந்தையில் விலைகள் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளன.

யூரியா 151 சதவீதத்தாலும், டீசல் 148 சதவீதத்தாலும், பெட்ரோல் 136 சதவீதத்தாலும், உரம் 135 சதவீதத்தாலும், நிலக்கரி 112 சதவீதத்தாலும், அரிசி 107 சதவீதத்தாலும் விலை அதிகரிப்பைக் கண்டுள்ளன.

குறிப்பாக, உலகளாவிய உர வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பகுதி ஈரான், கட்டார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய வளைகுடா நாடுகள் சூழ்ந்துள்ள ‘ஹோர்முஸ் நீரிணை’ வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.

தற்போது இப்பாதையில் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடைகளால், உரத் தொழிற்சாலைகளின் உற்பத்திச் செலவு மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.

போருக்கு முன்னர் 150 டொலராக இருந்த ஒரு தொன் சல்பூரிக் அமிலத்தின் விலை, தற்போது 1,000 டொலரை நெருங்கியுள்ளது.

உலகமே இத்தகைய பாரிய பொருளாதாரப் பேரழிவை எதிர்கொண்டுள்ள இந்த இக்கட்டான தருணத்தில், தியவன்ன நாடாளுமன்றத்தில் ஆட்சி பீடத்தில் உள்ள ஆளுங்கட்சியினர் சிலர் இன்னும் அலங்காரப் பொம்மைகளைப் போல எவ்விதப் பொறுப்பும் இன்றி நாடாளுமன்றில் கதிரைகளைச் சூடாக்கிவருகின்றனர்.

மறுபுறம் எதிர்க்கட்சியினரோ, ‘இன்று ஆட்சியைத் தாருங்கள், நாம் உடனே விலைவாசியைக் குறைப்போம்’ என்று எவ்விதத் தெளிவான பொருளாதாரத் திட்டமும் இன்றி ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தியவன்ன ஏரியில் இருக்கும் தவளைகளைப் போலப் பயனில்லாமல் சத்தமிடுவதைத் தவிர்த்து, உலக நிலைவரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பிராந்தியப் போர் முடியும் வரையிலாவது உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது பற்றி ஆராய்ந்து, பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வுகளைத்தேட ஒன்றிணைய வேண்டும், என்பதே இன்றைய காலத்தின் அவசியமான தேவையாகும்.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )