
எரான் விக்ரமரத்ன தலைமையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்காலக் குழு நியமனம்
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தலைமையில் 9 பேர் கொண்ட இடைக்கால குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள இந்த இடைக்காலக் குழுவில் முன்னாள் நட்சத்திர வீரர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் நிர்வாகத் துறை நிபுணர்கள் எனப் பல்துறை சார்ந்தவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, எரான் விக்ரமரத்ன தலைமையிலான இந்த இடைக்கால குழுவில் ரொஷான் மஹாநாம, குமார சங்கக்கார, சிதத் வெத்தமுனி, பிரகாஷ் ஷாஃப்டர், துஷிர ரதெல்ல, அவந்தி கொலம்பகே, உபுல் குமாரப்பெரும மற்றும் தினல் பிலிப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அதன் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டாகப் பதவி விலகியது.
விளையாட்டுத்துறைச் சட்டத்தின் கீழ் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிர்வாக நடவடிக்கைகள் தற்காலிகமாக விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அதன் பணிகளை முறையாகக் கொண்டு செல்லவும், தேவையான மறுசீரமைப்புகளை முன்னெடுக்கவும் எரான் விக்ரமரத்ன தலைமையிலான இந்த இடைக்காலக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
