
கிளிநொச்சியில் குழந்தையை விற்பனை செய்ய முயன்ற மூவருக்கு விளக்கமறியல்
கிளிநொச்சியில் இரண்டு வயது சிறுமியை பணத்திற்காக விற்பனை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நீதவான் முன்னிலையில் அவர்கள் நேற்று (26) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய சந்தேகநபர்கள் மூவரும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு வயது சிறுமியை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாய், சிறுமியை விலைக்கு வாங்கிய பெண் மற்றும் மற்றுமொரு ஆண் ஆகிய மூவர் கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸாரால் நேற்று முன்தினம் (25) கைது செய்யப்பட்டனர்.
தர்மபுரம் கிராம அலுவலர் பொலிஸில் செய்த முறைப்பாட்டிற்கமையவே இந்த மூன்று சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறுமியின் தாயும் குறித்த ஆணும் சிறுமியை 50,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முயன்ற போதிலும், இறுதியில் 40,000 ரூபாவிற்கு சிறுமி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் நடத்திய விசாரணையில், சிறுமியை 40,000 ரூபாவிற்கு விற்பனை செய்து பெற்ற பணத்தில், சிறுமியின் தாயும் குறித்த ஆணும் 15,000 ரூபா பெறுமதியான பாவிக்கப்பட்ட (Used) கைபேசி ஒன்றையும், மேலும் 10,000 ரூபா செலவில் பல்வேறு பொருட்களையும் கொள்வனவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான தாய் 27 வயதுடையவர் என்பதுடன், அவருக்கு 04 வயதில் மற்றுமொரு பெண் பிள்ளையும் உள்ளார்.
கைது செய்யப்பட்ட ஆண் சந்தேகநபர், சிறுமியின் தாயின் கள்ளக்காதலன் எனவும் அவர் 31 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை, சிறுமியை விலைக்கு வாங்கிய பெண் 36 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (26) கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
