
கொழும்பில் இன்று பலத்த பாதுகாப்பு: இந்தியத் துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்குகள்
இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று இலங்கை வருகின்றார்.
தனது பயணத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் அவர் ஈடுபடவுள்ளார்.
இந்த விஜயத்தின் முக்கிய அங்கமாக, ‘டித்வா’ சூறாவளி புனர்வாழ்வு பணிகள் மற்றும் பல்வேறு அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டங்கள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்படவுள்ளன.
மேலும், அவர் அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களையும் நேரில் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
துணை ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு கொழும்பில் இன்று பலத்த பாதுகாப்பு மற்றும் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவர் தங்கியிருக்கும் தாஜ் சமுத்ரா ஹோட்டல் வரையிலும், அங்கிருந்து ஜனாதிபதி செயலகம் செல்லும் பாதைகளிலும் போக்குவரத்து இன்று மட்டுப்படுத்தப்படவுள்ளது.
நாளை மறுதினம் வரை இந்த விசேட போக்குவரத்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்பதால், மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
