ஹோமாகமவில் தனியார் பல்கலை மாணவர் கொலை : 5 மாணவர்கள் கைது – புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல்

ஹோமாகமவில் தனியார் பல்கலை மாணவர் கொலை : 5 மாணவர்கள் கைது – புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல்

ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற மோதலில் தனியார் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (09) குறித்த பல்கலைக்கழகத்தினால் சிங்கள, தமிழ் புத்தாண்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், மாலை 6.00 மணியளவில் அந்த விழா நிறைவடைந்துள்ளது.

அதன் பின்னர், மாணவர்கள் குழுவொன்று அந்த ஹோட்டலில் தனியாக விருந்துபசாரம் (Party) ஒன்றினை நடத்தியுள்ளனர்.

இந்த விருந்துபசாரத்தின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பெரும் மோதலாக மாறியதிலேயே இந்தத் துரதிர்ஷ்டவசமான மரணம் சம்பவித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்களின்படி, விருந்துபசாரத்தின் போது மாணவி ஒருவர் கழிவறைக்குச் சென்றபோது, மாணவர் ஒருவர் அவரைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

இதனை அவதானித்த அந்த மாணவியின் நண்பரான (கொலை செய்யப்பட்ட மாணவர்), மாணவியைப் பின்தொடர்ந்து சென்ற மாணவரைத் தாக்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த குறித்த மாணவரின் நண்பர்கள் குழுவொன்று, தாக்குதல் நடத்திய மாணவரை மிகக் கொடூரமான முறையில் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

படுகாயமடைந்த மாணவர் ஹோட்டல் ஊழியர்களால் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் நிக்கதலுபொத்த, வெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 5 மாணவர்களை மொரகஹஹேன பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )