மலையக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தொடர்மாடி குடியிருப்புகள் பொருத்தமானவை அல்ல – பிரதமரிடம் எடுத்துரைப்பு

மலையக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தொடர்மாடி குடியிருப்புகள் பொருத்தமானவை அல்ல – பிரதமரிடம் எடுத்துரைப்பு

மலையக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தொடர்மாடி குடியிருப்புகள் பொருத்தமானவை அல்ல என மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூகக் கூட்டிணைவு பிரதமர் ஹரினி அமரசூரியவிடம் வலியுறுத்தியுள்ளது.

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பணியாற்றும் நாடு முழுவதிலுமுள்ள சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையே அலரி மாளிகையில் நடைபெற்ற ஒரு சிறப்புக் கூட்டத்தின் போது, மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூகக் கூட்டிணைவு பிரதமரிடம் இந்த விடயத்தை கூறியுள்ளது.

ஏற்கனவே வீடொன்றை நிர்மாணிப்பதற்குத் தகுந்த காணியைக் கொண்டிருப்பவர்களுக்கு அரசாங்கத்தினால் 5 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்படவுள்ளதுடன், பிரதான நகரப் பகுதிகளில் பொது வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் எல். குமுதுலால் போகஹாவத்த இந்த சந்திப்பின் போது சிவில் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.

பேரழிவால் பாதிக்கப்பட்ட மலையக தமிழ் மக்களின் வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கான நடைமுறை சாத்தியமான 15 முன்மொழிவுகளுடன் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட அறிக்கையின் நகல் ஒன்றையும் இதன்போது பிரதமருக்கு கையளித்த மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு, இந்த விடயங்கள் குறித்து விவாதிக்க உடனடியாக திகதியை வழங்குமாறும் பிரதமரைக் கோரியிருந்தது.

பிரதமருடன் நடைபெற்ற கலந்துரையாடலில், டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் புனரமைப்பு மற்றும் மாற்றுத் திட்டங்கள் தொடர்பான பல பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டதாக மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )