
பிரித்தானியா-பிரான்ஸ் ஒப்பந்தம் முடிவு!! ஆங்கில கால்வாயை கடக்க முடியாமா?
இங்கிலாந்துக்கும், பிரான்ஸூக்கும் இடையிலான ஒப்பந்தம் முடிவுக்கு வரும் நிலையில், ஆங்கில கால்வாய் ஊடக நாட்டிற்குள் நுழையும் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையே , சிறிய படகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதைத் தடுப்பதற்கான புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தம் இன்னும் கையெழுத்திடப்படவில்லை.
இந்த ஒப்பந்தம் மூலம் பிரான்சின் வடக்கு எல்லையில் காவல் பணிக்கான செலவில் மூன்றில் இரண்டு பங்கை பிரித்தானியா செலுத்துகிறது.
தற்போதைய ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமையும் காலாவதியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த பேச்சுவார்த்தைகள் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற 37வது பிரித்தானிய-பிரான்ஸ் உச்சிமாநாட்டில் தொடங்கியது.
அத்துடன், மற்றொரு சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்காக பிரித்தானிய அதிகாரிகள் கடந்த வாரம் பாரிஸ் சென்றிருந்தனர்.
சட்டவிரோத குடியேறிகள் பயணிக்கும் சிறு படகுகளை இடைமறிப்பதை அதிகரிக்குமாறு உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் பிரான்ஸ் அரசாங்கத்தை கோரிவருகின்றார்.
இதன் காரணமாக பிரான்ஸ் அரசுடனான புதிய ஒப்பந்தம் தாமதமாகியுள்ளதாக தி டைம்ஸ்’ செய்தி வெளியிட்டது.
இந்த ஒப்பந்தத்தில் “நெகிழ்வுத்தன்மையையும் புதுமையையும்” சேர்க்க முயற்சிப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
