
ஹட்டனில் பாடசாலை மாணவன் மீது தாக்குதல் – 03 மாணவர்கள் கைது
ஹட்டன் பிரதான பாடசாலையொன்றின் வகுப்பறைக்குள் மாணவன் ஒருவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் இந்த மாணவர்கள் நேற்று (28) கைது செய்யப்பட்டதாக ஹட்டன் தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தரம் 10 இல் கல்வி பயிலும் இரு மாணவர் குழுக்களிடையே கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோதலே இந்த தாக்குதல் சம்பவத்துக்கான
காரணம் என கூறப்படுகின்றது.
இந்த மோதலில் அந்தப் பாடசாலையின் பழைய மாணவர் ஒருவரும் தொடர்புபட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில்,
தெரியவந்துள்ளது.
இருப்பினும், இந்த சம்பவம் பாடசாலையிலேயே சமரசம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அது தொடர்பான தாக்குதல் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதனையடுத்து, தாக்குதலுக்குள்ளான மாணவனின் தாயார் நேற்று (28) ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு பழைய மாணவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
காயமடைந்த மாணவன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
