
ட்ரம்ப்பின் அறிவிப்பை மறுத்த ஈரான்: உலகப் பொருளாதாரப் போராக மாறும் வளைகுடா மோதல்
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கா தற்காலிகமாக நீட்டித்துள்ளது.
ஈரானிய எரிசக்தி தளங்கள் மீதான தாக்குதல் நிறுத்தத்தை, எதிர்வரும் ஏப்ரல் 6-ஆம் திகதி திங்கட்கிழமை இரவு 8 மணி வரை நீடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரானின் கோரிக்கைக்கு இணங்கவே இந்த அவகாசம் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்ட போதிலும், ஈரான் அதனை முற்றாக மறுத்துள்ளது.
அதேவேளை, தரைவழிப் படைகளை அனுப்பி ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க அமெரிக்கா முயன்றால், வளைகுடாவின் முக்கிய கேந்திர நிலையங்களான டுபாயின் ஜெபல் அலி வளாகம், அபுதாபியின் பரக்கா அணுமின் நிலையம் மற்றும் முகமது பின் ரஷீத் சூரிய சக்தி வளாகம் உள்ளிட்டவை இலக்கு வைக்கப்படும் என ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, இந்த மோதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ‘இது ஒரு தொலைதூரப் போர் மட்டுமல்ல, கொரோனா பெருந்தொற்றுக்கு இணையான ஒரு உலகளாவிய அதிர்ச்சி’ என எச்சரித்துள்ளார்.
வொஷிங்டன் ஒரு மூலோபாய முட்டுச்சந்தியில் சிக்கியுள்ள நிலையில், ஈரான் இதனை ஒரு உலகப் பொருளாதாரப் போராக மாற்றியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
