
போரை நிறுத்த 15 அம்சத் திட்டம் – அமெரிக்காவுக்கு அடிபணியுமா ஈரான்?
மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள இஸ்ரேல், அமெரிக்க, ஈரான் போர் தற்போது ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், இதன் தாக்கம் உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மோதலை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா 15 அம்சக் கோரிக்கை திட்டமொன்றை முன்வைத்துள்ளது.
இந்த மோதலின் தாக்கம் மத்திய கிழக்கைத் தாண்டி உலகளாவிய அளவில் உணரப்படுகிறது. சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 120 டொலரை அணுகியுள்ள நிலையில், எரிசக்தி பாதுகாப்பு மீண்டும் உலக நாடுகளின் முக்கிய கவலையாக மாறியுள்ளது.
சர்வதேச எரிசக்தி முகமை (International Energy Agency) வெளியிட்டுள்ள மதிப்பீடுகளின் பிரகாரம், உலக எண்ணெய் விநியோகத்தில் சுமார் 3% முதல் 10% வரை பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சுட்டிக்காட்டப்படடுள்ளது.
உலக வர்த்தகத்திற்கு முக்கியமான ஹோர்முஸ் கடல்சந்தி வழியாக தினசரி சுமார் 20 மில்லியன் பேரல் எண்ணெய் கடத்தப்படுகிறது. இந்தப் பகுதியில் உருவாகியுள்ள பாதுகாப்பு அச்சம், உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) வெளியிட்டுள்ள கணிப்புகளின்படி, இந்த மோதல் நீடித்தால் உலகளாவிய பணவீக்கம் 0.5% முதல் 1% வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் பொருளாதார வளர்ச்சி 0.3% வரை குறையக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றங்கள் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 150 அமெரிக்க டொலரை எட்டினால், அது உலகளாவிய ரீதியில் பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு (Global Recession) வழிவகுக்கும் என உலகின் மிகப்பெரிய நிதி முகாமைத்துவ நிறுவனமான ‘பிளாக்ராக்’ (BlackRock) தலைவர் லாரி ஃபிங்க் (Larry Fink) எச்சரித்துள்ளார்.
மேலும், மத்திய கிழக்கு மோதல்கள் முடிவுக்கு வராவிட்டால், அடுத்த சில ஆண்டுகளுக்கு எண்ணெய் விலை 100 முதல் 150 டொலர் வரை நீடிக்கக்கூடும் எனவும், இது ஒரு செங்குத்தான பொருளாதார வீழ்ச்சிக்கே (Steep Recession) இட்டுச் செல்லும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நெருக்கடியை சமாளிக்க அமெரிக்கா முன்வைத்துள்ள 15 அம்சத் திட்டம், ஈரானுக்கு பொருளாதார சலுகைகளையும் கடுமையான கட்டுப்பாடுகளையும் இணைத்த கலப்பு அணுகுமுறையாக அமைந்துள்ளது. இதில், ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள அனைத்து தடைகளையும் நீக்குதல், குடிசார் அணுசக்தித் திட்டங்களுக்கு உதவி வழங்குதல் போன்ற சலுகைகள் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்காவின் 15 அம்ச கோரிக்கை வருமாறு,
1. ஈரான் மீதான அனைத்துத் தடைகளையும் நீக்குதல்.
2. ஒரு குடிசார் அணுசக்தித் திட்டத்தை (மின்சார உற்பத்தி) முன்னெடுத்துச் செல்வதற்கும் மேம்படுத்துவதற்கும் அமெரிக்காவின் உதவி.
3. தடைகள் மீண்டும் விதிக்கப்படும் என்ற அச்சுறுத்தலை நீக்குதல்.
4. ஈரானின் அணுசக்தித் திட்டம் ஒரு வரையறுக்கப்பட்ட கட்டமைப்பின் கீழ் முடக்கப்பட்டுள்ளது.
5. செறிவூட்டப்பட்ட யுரேனியம் மேற்பார்வை மற்றும் ஒப்புக்கொள்ளப்பட்ட வரம்புகளுக்கு உட்பட்டுத் தொடர்ந்து இருக்கும்.
6. ஏவுகணைத் திட்டம் பிற்காலத்தில், அதன் அளவு மற்றும் வீச்சு மீதான வரம்புகளுடன் கையாளப்படும்.
7. அணுசக்தித் திட்டங்களின் பயன்பாடு குடிசார்/தற்காப்பு நோக்கங்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்படும்.
8. தற்போதுள்ள அணுசக்தித் திறன்களின் மேம்பாடு நிறுத்தப்படும்.
9. செறிவூட்டும் திறன்களை மேலும் விரிவுபடுத்தக் கூடாது.
10. ஈரானிய மண்ணில் ஆயுதத் தரத்திலான அணுப் பொருட்களை உற்பத்தி செய்யக் கூடாது.
11. செறிவூட்டப்பட்ட அனைத்துப் பொருட்களும் ஒப்புக்கொள்ளப்பட்ட காலக்கெடுவுக்குள் சர்வதேச அணுசக்தி முகமையிடம் (IAEA) ஒப்படைக்கப்படும்.
12. நடன்ஸ், இஸ்பஹான் மற்றும் ஃபோர்டோ ஆகியவை பயன்பாட்டிலிருந்து நீக்கப்படும் (அழிக்கப்படும்).
13. சர்வதேச கண்காணிப்பு மற்றும் சரிபார்ப்பு வழிமுறைகள் அமல்படுத்தப்படும்.
14. இணக்கத்துடன் கூடிய படிப்படியான செயலாக்கம்.
15. இரு தரப்பினருக்கும் இடையேயான கூடுதல் பிராந்திய மற்றும் பாதுகாப்பு உடன்பாடுகள்.
அமெரிக்க ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், “அமெரிக்கா தனது நிலைப்பாட்டில் இருந்து மாறாது” எனத் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், இந்த திட்டம் கடுமையான அரசியல் நிலைப்பாட்டின் பிரதிபலிப்பாக பார்க்கப்படுகிறது.
ஈரான் இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஈரானிய கூட்டுப் படைத் தளபதியின் ஊடகப் பேச்சாளர் இப்ராஹிம் சோல்ஃபகாரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில்,
“எங்களைப் போன்றவர்கள் அமெரிக்க ஜனாதிபதி போன்றவர்களுடன் ஒருபோதும் இணக்கமாகச் செயல்பட முடியாது. நாம் ஏற்கனவே கூறியது போல, எவரும் அவருடன் எந்தவிதமான கொடுக்கல் வாங்கல்களையும் வைத்துக் கொள்ளப் போவதில்லை. அது இப்போதும் சரி, எப்போதும் சரி அப்படியே நீடிக்கும். உலகில் உண்மை மற்றும் பொய் என இரண்டு விடயங்கள் மட்டுமே உள்ளன. அதனடிப்படையில் எது சரியானது என்பது உலகிற்குத் தெரியும்.”
கடந்த இரண்டு ஆண்டுகளாக உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த சூழலிலும், ஈரான் மீது இரண்டு முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த முடியாது என ஈரான் தலைமை ஏற்கனவே அறிவித்திருந்துள்ளது என இப்ராஹிம் சோல்ஃபகாரி வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருத்துப்படி, இந்த நிபந்தனைகள் ஈரானால் எளிதில் ஏற்கப்படுவது சாத்தியமற்றதாக இருக்கலாம் எனக் கூறுகின்றனர். இஸ்ரேல் இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த மோதல் நீடித்தால், “proxy war” எனப்படும் மறைமுக மோதல்கள் அதிகரிக்கலாம் என்றும், உலக பொருளாதாரம் மந்தநிலை மற்றும் பணவீக்கம் இணைந்த “stagflation” (தேக்கநிலை) நிலையை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா மோதல், ஒரு பிராந்திய பிரச்சினையைத் தாண்டி, உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் திசையை மாற்றக்கூடிய முக்கிய நெருக்கடியாக மாறியுள்ளது. அமெரிக்காவின் 15 அம்சத் திட்டம் இந்த மோதலை தீர்க்க ஒரு வாய்ப்பாக இருந்தாலும், அது நடைமுறைக்கு வருமா என்பது ஈரானின் அடுத்த கட்ட முடிவுகள் மற்றும் சர்வதேச இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் மேல் சார்ந்துள்ளது.
என்றாலும், ஈரானை முழுமையாக கட்டுப்படுத்தும் வகையில் திட்டம் உள்ளதால் இதற்கு ஈரான் இணங்காது என்பதுடன், போர் தொடரும் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
சு.நிசாந்தன்
