
அமெரிக்காவிலிருந்து 47,000 தொன் சமையல் எரிவாயு – இந்தியாவை சென்றடைந்த முக்கிய கப்பல்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து 47,000 தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நேற்று கர்நாடகாவின் மங்களூரை சென்றடைந்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரால் இந்தியாவில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
இது தொடர்பில் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியனுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் கலந்துரையாடினார்
அதன் பிறகு ஈரான் இராணுவத்தின் விசேட அனுமதியுடன் ஷிவாலிக் கப்பல், நந்தா தேவி கப்பல், ஜக் லட்கி கப்பல்களில் கச்சா எண்ணெய் இந்தியா வந்தடைந்தன.
இதனிடையே வளைகுடா நாடுகளின் கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு (எல்பிஜி) போக்குவரத்து முடங்கியதால் அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து 22 இலட்சம் தொன் எல்பிஜியை கொள்முதல் செய்ய இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.
இதன்படி அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து 47,000 தொன் சமையல் எரிவாயு ஏற்றி வந்த பைக்ஸிஸ் பயோனீர் கப்பல் நேற்று கர்நாடகாவின் மங்களூரை வந்தடைந்தது
மங்களூருவில் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி சேமிப்பு கிடங்குகள் உள்ளன.
அங்கிருந்து கர்நாடகா, தமிழகம், தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பெட்ரோல், டீசல், எல்பிஜி சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்படுகிறது.
மங்களூரு துறைமுகத்துக்கு அடுத்தடுத்து சமையல் சமையல் எரிவாயு கப்பல்கள் வருவதால் தென் மாநிலங்களில் எல்பிஜி விநியோகம் அதிகரிக்கும் என பொதுத்துறை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே சீனாவுக்கு சென்று கொண்டிருந்த ரஷ்யாவின் 07 கச்சா எண்ணெய் கப்பல்கள் இந்தியாவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் அகுவா டைட்டன் என்ற கப்பல் சுமார் ஒரு இலட்சம் தொன் கச்சா எண்ணெயுடன் நேற்று முன்தினம் மங்களூரு துறைமுகத்தை வந்தடைந்தது.
ரஷ்யாவின் 6 கச்சா எண்ணெய் கப்பல்களும் அடுத்தடுத்து இந்திய துறைமுகங்களை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
