
நான்கு முதல் ஆறு வாரங்களில் போர் முடிவுக்கு வரும் – டொனால்ட் ட்ரம்ப்
ஈரான் மீது முன்னெடுக்கப்பட்டு வரும் ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி இராணுவ நடவடிக்கை இன்னும் நான்கு முதல் ஆறு வார காலப்பகுதிக்குள் முடிவுக்கு வரக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி போர் ஆரம்பமானது முதல், அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தொடர்பில் வெள்ளை மாளிகை தெளிவான தகவல்களை வெளியிட்டிருக்கவில்லை.
வொஷிங்டனில் இருந்து புளோரிடா நோக்கிப் பயணித்த போது தனது ‘ட்ரூத் சோஷியல்’ (TruthSocial) தளத்தில் இட்டுள்ள பதிவிலேயே ட்ரம்ப் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் இராணுவ வலிமையைச் சிதைப்பதிலும், அந்நாட்டின் அணு ஆயுத உற்பத்தித் திறனைப் பாதிப்புக்குள்ளாக்குவதிலும் அமெரிக்கா கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக ட்ரம்ப் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற சமிக்ஞையை அவர் வெளியிட்டுள்ளார்.
இருப்பினும், ஈரான் எல்லைக்குள் அமெரிக்கத் தரைப்படையினர் இறக்கப்படுவார்களா? என்பது தொடர்பில் சர்வதேச ரீதியாக எழுப்பப்பட்டு வரும் கேள்விக்கு ட்ரம்ப் எவ்வித பதிலையும் வழங்கவில்லை.
வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் தீவிரமாக இடம்பெற்று வரும் நிலையில், தரைப்படை நடவடிக்கை தொடர்பில் அவரது மௌனம் பாதுகாப்பு ஆய்வாளர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, ஈரானுடனான இந்தப் போர் மூன்று வாரங்களைக் கடந்துள்ள நிலையில், வளைகுடாப் பிராந்தியத்தில் பதற்றம் தொடர்ந்தும் நீடித்து வருகின்றது.
