
நேட்டோ நாடுகள் கோழைகள் – அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் கடும் விமர்சனம்
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு உதவாத நேட்டோ கூட்டாளிகளை ‘கோழைகள்’ என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
“அமெரிக்கா இல்லாமல், நேட்டோ ஒரு காகிதப் புலி” என்றும் டிரம்ப் தனது ‘ட்ரூத்’ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் “அணுசக்தியால் இயங்கும் ஈரானைத் தடுக்கும் போராட்டத்தில் அவர்கள் சேர விரும்பவில்லை. அவர்கள் கோழைகள் என்பதை நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
அதிக எண்ணெய் விலைகளுக்கு ஒரே காரணமாக இருக்கும் ஒரு எளிய இராணுவ நடவடிக்கையான ஹோர்முஸ் நீரிணையை திறக்க உதவ அவர்கள் விரும்பவில்லை. மிகக் குறைந்த ஆபத்துடன், இதைச் செய்வது அவர்களுக்கு மிகவும் எளிது. ஆனால், முன்வர மறுக்கின்றனர் என்றும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு நடவடிக்கைக்கு உதவுமாறு டிரம்ப் தொடர்ந்து நேட்டோ நாடுகளை வலியுறுத்தி வருகின்றன போதிலும் எந்தவொரு நாடும் ஈரான் மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாக செயல்பட மறுத்துவிட்டன.
இதனால் கடந்த சில நாட்களாக நேட்டோ மீதான தனது விமர்சனங்களை ட்ரம்ப் தீவிரப்படுத்தியுள்ளார். இதனால், நேட்டோ அமைப்பு எதிர்காலத்தில் பிளவுபடலாம் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
