செம்மணி மனிதப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வு பணிகள் ஏப்ரலில் ஆரம்பம்

செம்மணி மனிதப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வு பணிகள் ஏப்ரலில் ஆரம்பம்

செம்மணி மனிதப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வு பணிகள் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

1999ஆம் ஆண்டில்தான் இந்தப் புதைகுழியிலிருந்து எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அன்றிலிருந்து 2024 வரை 25 வருடங்கள் கடந்துவிட்டன. அந்த 25 வருட காலப்பகுதியிலும் செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து 15 எலும்புக்கூடுகளே கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.

2015 முதல் 2019 வரையான அரசாங்கத்தின் கீழ், தமிழ் அரசுக்கட்சி மற்றும் அதன் தலைவர்களான சுமந்திரன் போன்றோர் எதிர்க்கட்சியில் இருந்தபோதும், ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் அவர்களுக்கு விசேட செல்வாக்கு இருந்தது. அவர்களுக்கு அமைச்சர்களை விடவும் அதிக அதிகாரம் இருந்தது.

அப்பகுதியின் பணிகளுக்காகப் பெருமளவு நிதியும் வழங்கப்பட்டது. ஆனால், அந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ் அரசுக்கட்சித் தலைவர்களுக்கு ஏன் செம்மணி புதைகுழி மறந்து போனது? எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேள்வியெழுப்பியுள்ளார்.

நாம் 2024ஆம் ஆண்டு செப்டம்பரில் அதிகாரத்தைப் பொறுப்பேற்றோம். நாடாளுமன்றப் பெரும்பான்மையை நவம்பரில் பெற்றுக்கொண்டோம். அன்றிலிருந்து இன்று வரையிலான இந்த 17 மாதங்களில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 239 ஆகும். இவ்வளவு பணிகளைச் செய்யும் அரசாங்கத்தின் மீதே தற்போது சிலர் குற்றச்சாட்டு முன்வைப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

செம்மணி புதைகுழி அமைந்துள்ள தொகுதியிலும் நாம் வெற்றி பெற்றுள்ளோம். அங்கு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரே உள்ளார். இது தொடர்பான முழுமையான விபரங்களை நாம் அறிவோம். ஆராய்ந்துள்ளோம். இதனை விசாரணை செய்வதற்கு எமக்கு மக்கள் ஆணை உள்ளது என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இது மாத்திரமல்ல, மாத்தளை புதைகுழி குறித்தும் நாம் விசாரணை செய்கிறோம். நீதித்துறை பொறிமுறையின் ஊடாக நீதியை நிலைநாட்டும் போது அதற்கு காலம் எடுக்கும். ஏப்ரல் 20ஆம் திகதி மீண்டும் செம்மணி புதைகுழி அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )