
மேலும் 02 எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன
திரவ பெற்றோலிய எரிவாயு ஏற்றிய 02 கப்பல்கள் இன்று (18) காலை உஸ்வெட்டகெய்யாவ, தல்தியவத்தையில் உள்ள எரிவாயு இறக்கும் மிதவையை வந்தடைந்துள்ளன.
அதிலிருந்து எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று (17) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மார்ச் மாதத்தில் இதுவரையில் 38,000 மெட்ரிக் தொன் லிட்ரோ எரிவாயு நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன், அடுத்த இரண்டு நாட்களுக்குள் மேலும் 33,000 மெட்ரிக் தொன் எரிவாயு கையிருப்பு நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.
இதன் மூலம் நாட்டுக்குள் எரிவாயு விநியோகத்தை ஸ்திரப்படுத்தவும், தற்போதுள்ள தேவைகளை பூர்த்தி செய்யவும் முடியும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
எனவே பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லையென ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
