இஸ்ரே,ஈரான், அமெரிக்க மோதலால்  நிலைகுலைந்துள்ள உலக பொருளாதாரம் – இலங்கை எதிர்கொள்ள போகும் சவால் என்ன?

இஸ்ரே,ஈரான், அமெரிக்க மோதலால் நிலைகுலைந்துள்ள உலக பொருளாதாரம் – இலங்கை எதிர்கொள்ள போகும் சவால் என்ன?

ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான மோதல் ஒரு சாதாரண இராணுவ மோதல் அல்ல. இது உலக பொருளாதாரத்தின் பல முக்கிய துறைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்துள்ளடன், ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொவிட்-19 மற்றும் ரஷ்யா- உக்ரைன் போர் ஆகியவற்றுக்குப் பின்னர், இந்த மோதல் உலக பொருளாதாரத்திற்கு மூன்றாவது பெரிய அதிர்ச்சியாக கருதப்படுகிறது. இந்த மோதல் உலகளாவிய எரிசக்தி மற்றும் எரிவாயு சந்தையில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியம் உலக எண்ணெய் உற்பத்தியின் முக்கிய மையமாக உள்ளது. குறிப்பாக, ஹோர்முஸ் கடல்சந்தி வழியாக உலக எண்ணெயின் பெரும்பங்கு கடத்தப்படுகிறது. இந்த பகுதி பாதிக்கப்படும்போது, எண்ணெய் விலை திடீரென உயர்வது தவிர்க்க முடியாது. உலக எண்ணெய் வர்த்தகத்தில் 20% இந்த மோதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆட்டங்கண்டுள்ள நாடுகள் – சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை

எண்ணெய் விலை உயர்வு உலகளாவிய உற்பத்தி செலவுகளை உயர்த்தியுள்ளதோடு, மின்சாரம், போக்குவரத்து மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளின் செலவையும் அதிகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக உலகளாவிய பணவீக்கம் அதிகரிக்கும் அபாயமும் உருவாகியுள்ளது. எரிபொருள் விலை உயர்வின் தாக்கம் உணவு உற்பத்தி முதல் போக்குவரத்து வரை அனைத்து துறைகளிலும் பரவி வருகிறது.

எண்ணெய் விலை உயர்வு உலக பொருளாதார வளர்ச்சியை மந்தமாக்கும் என்பதுடன், “Stagflation” எனப்படும் வளர்ச்சி இல்லாமை மற்றும் பணவீக்கம் ஒன்றாக ஏற்படும் நிலையை உருவாக்கும் அபாயம் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.

இஸ்ரேன் – ஈரான் போருக்கு முன்னர் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 72 டொலராக காணப்பட்டது. ஆனால், தற்போது அது 106 முதல் 120 டொலர் வரை உயர்ந்துள்ளது. இது 40% முதல் 70% வரையான அதிகரிப்பு. சில ஆய்வாளர்கள் 150 டொலர் வரை கச்சா எண்ணெய் விலை உயர்வடை வாய்ப்புகள் உள்ளதாக எச்சரித்துள்ளனர்.

ஹோர்முஸ் வழியாக தினசரி 20 மில்லியன் பீப்பாய் எண்ணெயும், உலக எரிவாயு பயன்பாட்டில் 20% மும் கொண்டுசெல்லப்படுகிறது. இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளமையால் பல நாடுகள் வரலாறு காணாத நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. குறிப்பாக பொருளாதார வல்லராக உள்ள அமெரிக்காவில்கூட எரிபொருளின் விலை 27 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக அந்நாட்டு தரவுகள் தெரிவிக்கின்றன.

கட்டாரில் எரிவாயு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.  கட்டார் உலக எரிவாயு விநியேபகத்தில் முக்கிய பங்காளராகும். மத்திய கிழக்கில் இருந்துதான் ஆசியாவுக்கு 84% கச்சா எண்ணெய் மற்றும் 83% எரிவாயு கொண்டுவரப்படுகின்றன. இதனால் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், இலங்கை, நேபாளம்,  வியட்நாம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து உட்பட பல  ஆசிய நாடுகள் விழிபிதுங்கி உள்ளன.

எரிபொருள் இன்மையால் உலக வர்த்தக சங்கிலிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன், கடல் போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பதால் சர்வதேச வர்த்தகச் செயல்பாடுகள் குறைந்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது.

எரிவாயு, உரம் மற்றும் உணவுப் பொருட்களின் விநியோகத்தில் தொடர்ச்சியான தடை ஏற்பட்டால் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு நெருக்கடியை உருவாக்கும் அபாயம் அதிகரிக்கும் என ஐ.நா. கூறியுள்ளது.

இந்த உலகளாவிய அதிர்ச்சியின் மிகப்பெரிய தாக்கத்தை சந்திப்பவை வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளே குறிப்பாக இலங்கை போன்ற நாடுகள் இந்த சூழ்நிலையில் பல அடுக்குகளில் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலைக்கு இலங்கை தள்ளப்படும்

எரிபொருள் இறக்குமதி செலவு அதிகரிப்பு இலங்கைக்கு மிகப்பெரிய சிக்கலாக மாறியுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமயிலான அரசாங்கம் இந்த நெருக்கடியை சமாளிக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ள போதிலும், நிலைமை தொடர்ந்தால் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் சூழல் உருவாகலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இலங்கை போன்ற நாடுகள் பெரும்பாலும் வெளிநாட்டு எண்ணெயை சார்ந்துள்ளதால், விலை உயர்வு நேரடியாக அரசின் செலவையும், மக்களின் வாழ்க்கைச் செலவையும் பாதிக்கும். எரிபொருள் தட்டுப்பாடானது மின்சார உற்பத்தி குறைபாடு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகளை ஏற்படுத்த வழிவகுக்கும்.

இதன் பிரகாரமே எதிர்காலத்தில் இலங்கையில் மின் வெட்டு ஏற்படுவதை தவிர்க்க முடியாதென வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.  அதேபோன்று போக்குவரத்தை கட்டுப்படுத்த விசெட திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் சுற்றுலாத்துறை மெல்ல மெல்ல வளர்ந்துவரும் சூழலில் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பொருளாதார ரீதியாக கடுமையான சவால்களை எதிர்கொள்ளும் நிலைமை உருவாகியுள்ளது. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அந்நிய கையிருப்பு தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன. சமகால அரசாங்கம் அதன் அந்நிய கையிருப்பு பெறுமதி தற்போது 7 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளதாக அறிவிப்புகளை வெளியிட்ட சில தினங்களிலேயே இஸ்ரேல்-ஈரான் போர் வெடித்தது.

சுற்றுலாத்துறை மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் கிடைக்கப்பெறும் அந்நிய வருவாய் இழக்கப்பட்டால் அது கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலைக்கு இலங்கையை தள்ளிவிடும்.

இந்த நிலைமைகளை சமாளிக்கும் நோக்கில்தான் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் அரச விடுமுறையை இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளதுடன், போக்குவரத்துச் செயல்பாடுகளை முற்றாக முடக்கியுள்ளது. இதனால் எரிபொருள் பயன்பாட்டை குறைக்க முடியும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதுடன், கிவ்.ஆர் முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

வளர்ந்துவரும் நாடுகள் எதிர்கொள்ள போகும் சவால்கள் என்ன?

மத்திய கிழக்கில் போர் நிலைமை தொடர்ந்தால் வெளிநாட்டு நாணய நெருக்கடி உருவாகும். அதிக விலைக்கு எண்ணெய் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அமெரிக்க டொலருக்கான தேவை அதிகரிக்கும். இதனால் உள்ளூர் நாணயத்தின் மதிப்பு சரிவடையும். ஏற்கனவே கடன் சுமை அதிகமுள்ள நாடுகளுக்கு இது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தும்.

இந்த மோதல் நீண்ட காலம் நீடித்தால், உலக பொருளாதாரம் மந்தநிலைக்குச் செல்லும் அபாயம் உள்ளது. குறிப்பாக 1970களில் ஏற்பட்ட எண்ணெய் நெருக்கடியைப் போன்ற சூழல் மீண்டும் உருவாகலாம் என உலக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  உலகளாவிய ரீதியில் உணவுப் பற்றாக்குறை, வேலைவாய்ப்பு இழப்பு மற்றும் சமூக கலவரங்கள் அதிகரிக்கும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.

தீர்வு மற்றும் முன்னெச்சரிக்கை

இத்தகைய சூழ்நிலையை சமாளிக்க, வளர்ந்து வரும் நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். குறுகிய காலத்தில் எரிபொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துதல், இலக்கு மானியங்கள் வழங்குதல் மற்றும் சர்வதேச நிதி உதவிகளைப் பெறுதல் முக்கியம். நடுத்தர மற்றும் நீண்ட காலத்தில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை அதிகரித்தல், இறக்குமதி சார்பை குறைத்தல் மற்றும் உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்துதல் ஆகியவை அவசியமானவை. இதனை இலங்கை செய்துள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து அதனை நடைமுறைப்படுத்தியும் உள்ளது. அதனால் இலங்கையில் எரிபொருளை பெற்றுக்கொள்ள மாத்திரமே வரிசைகள் நிலவுகின்றன. ஆனால், பல ஆசிய நாடுகளில் எரிபொருள், எரிவாயும் உட்பட அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ளகூட பல்வேறு வரிசைகள் உருவாகியுள்ளன.  ஆனால், கட்டுப்பாடுகள் மக்களிடையே கொதிநிலைகளை ஏற்படுத்தலாம். அதனை சமாளிக்கவும் பல்வேறு உத்திகளை அரசாங்கம் கையாள வேண்டியுள்ளது.

மொத்தத்தில், இஸ்ரேல் – ஈரான் – அமெரிக்க மோதல் உலகளாவிய பொருளாதாரத்தில் பல அடுக்குகளிலான அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு இலங்கையும் விதிவிலக்கு அல்ல. குறிப்பாக இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு இந்த போர் பெரிய சோதனையாக மாறியுள்ளது.

இந்த மோதலின் காலநீளம் மற்றும் தீவிரம் தான் உலக பொருளாதாரத்தின் எதிர்கால திசையை தீர்மானிக்கும் முக்கிய காரணி ஆகும். அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீதான தாக்குதலை நீண்டகாலத்துக்கு நிறுத்தி ஈரானுடன் உடன்பாடுகளை எட்டினால் மாத்திரமே இந்த போர் முடிவடையும் என சர்வதேச பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சு.நிசாந்தன்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )