
கனடாவில், கடவுச்சீட்டு, புலம்பெயர்தல் ஆவணங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு
கனடாவில், கடவுச்சீட்டு மற்றும் சில புலம்பெயர்தல் ஆவணங்களுக்கான கட்டணங்கள், இம்மாதம், மாதம் 31ஆம் திகதி முதல் உயர இருப்பதாக கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
கனடாவின் சேவை கட்டண சட்டத்தின்படி இந்த கட்டண உயர்வு அமுலுக்கு வருவதாக கனடா அரசு தெரிவித்துள்ளது.
இதன் பிரகாரம் கனடாவில் வாழ்வோருக்கான கடவுச்சீட்டு கட்டணங்களைப் பொருத்தவரை, 10 ஆண்டுகள் பயன்படுத்தப்படக்கூடிய வகையிலான கடவுச்சீட்டுக்கான கட்டணம், பெரியவர்களுக்கு 160 டொலர்களிலிருந்து 163.50 டொலர்களாக உயர்வடையும்.
5 ஆண்டுகள் பயன்படுத்தப்படக்கூடிய வகையிலான கடவுச்சீட்டுகளுக்கான கட்டணம், பெரியவர்களுக்கு 120 டொலர்களிலிருந்து 122.50 டொலர்களாக அதிகரிக்கும்.
சிறுவர்களுக்கான கடவுச்சீட்டு கட்டணம், 57 டொலர்களிலிருந்து 58.50 டொலர்களாகவும் கனடாவுக்கு வெளியே வாழ்பவர்களைப் பொருத்தவரை, 10 ஆண்டுகள் பயன்படுத்தப்படக்கூடிய வகையிலான கடவுச்சீட்டுக்கான கட்டணம், பெரியவர்களுக்கு 260 டொலர்களிலிருந்து 266.25 டொலர்களாகவும் உயர்வடையும் என அரசாங்கம் கூறியுள்ளது.
