
மீண்டும் 100 டொலருக்கு மேல் உயர்ந்தது கச்சா எண்ணெய் விலை
பிரென்ட் கச்சா எண்ணெய் விலை நேற்று மீண்டும் 100 டொலரைத் தாண்டியுள்ளது.
அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தம் செய்து கொள்ள மறுத்ததாகக் கூறி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தின.
இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் சரக்குக் கப்பல் சென்றால் தாக்குதல் நடத்துவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில் இராக் கடல் பகுதியில் இருந்த 2 எண்ணெய் கப்பல்கள் மீதும் வளைகுடா நாடுகளின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது.
இதுபோல ஈரானில் உள்ள கச்சா எண்ணெய் ஆலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
கடந்த 9ம் திகதி ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெய் 119 டொலரை எட்டியது. ஒரே நாளில் சுமார் 30% உயர்ந்தது. எனினும் பின்னர் படிப்படியாகக் குறைந்து 80 டொலரானது. இந்நிலையில், அமெரிக்கா, ஈரான் போர் தொடர்வதால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. நேற்று காலையில் ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெய் மீண்டும் 100 டொலரைத் தாண்டியது. மாலையில் 100 டொருக்குக் கீழ் வர்த்தகமானது.
முன்னதாக, தனது அவசரகால இருப்பிலிருந்து பெருமளவு எண்ணெயை விடுவிப்பதாக சர்வதேச எரிசக்தி முகமை (IEA) அறிவித்தது. ஆனாலும் அவை சந்தைக்கு வர காலதாமதம் ஆகும் என்பதால், எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. மேலும், மத்திய கிழக்குப் பகுதியில் போர் தணிவதற்கான அறிகுறிகள் இல்லாததும் விலை உயர்வுக்கு மற்றொரு காரணம் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
