
அமெரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான் ஆதரவு குழு?
மேற்கு ஈராக்கில் அமெரிக்க இராணுவ விமானத்தை ஈராக்கிய எதிர்ப்புக் குழுக்கள் சுட்டு வீழ்த்தியதாகவும், குறித்த விமானம் ஏவுகணையால் தாக்கப்பட்டதாகக் கூறியதாகவும் ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், அமெரிக்கா இதை உறுதியாக மறுத்துள்ளதுடன், குறித்த விமானம் சுட்டு வீழ்த்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேற்கு ஈராக்கில் அமெரிக்காவின் KC-135 என்ற வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானது, இதன் போது இரண்டாவது விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.
ஈரானின் அரசு ஊடகங்களின்படி மேற்கு ஈராக்கில் எதிர்ப்புக் குழுக்களால் ஏவப்பட்ட ஏவுகணையால் அமெரிக்க இராணுவ எரிபொருள் நிரப்பும் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் இருந்த ஆறு பணியாளர்களும் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) மக்கள் தொடர்புத் துறையும் ஒரு அறிக்கையை வெளியிட்டு, அமெரிக்க விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அதில் இருந்த ஆறு பேரும் உயிரிழந்ததாகவும் தெரிவித்திருந்தது.
ஈராக்கில் இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பு பொறுப்பேற்கிறது
ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதப் பிரிவுகளின் அமைப்பான ஈராக்கில் இஸ்லாமிய எதிர்ப்பு, இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. “நமது நாட்டின் இறையாண்மை மற்றும் வான்வெளியைப் பாதுகாப்பதற்காக” KC-135 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அந்தக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
1950கள் மற்றும் 1960களின் முற்பகுதியில் போயிங் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட KC-135 விமானம், அமெரிக்க இராணுவத்தின் வான் எரிபொருள் நிரப்பும் கடற்படையின் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது.
60 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையில் ஈடுபட்டிருந்த KC-135 விமானம், பொதுவாக மூன்று பேர் கொண்ட குழுவைக் கொண்டிருந்தன.
ஒரு விமானி, ஒரு துணை விமானி மற்றும் மற்ற விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பப் பயன்படுத்தப்படும் பூமை இயக்கும் மூன்றாவது நபர் என்று இந்த குழு அமைந்திருக்கும் என அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது.
தாக்குதலை அமெரிக்கா நிராகரித்தது
ஈரானின் அரசு ஊடகங்கள் மற்றும் ஈராக் எதிர்ப்புக் குழுக்களின் கூற்றுக்களை அமெரிக்கா கடுமையாக மறுத்துள்ளது.
னது அறிக்கையில், KC-135 எரிபொருள் நிரப்பும் விமானம் காணாமல் போனது குறித்து அறிந்திருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளை கூறியது, ஆனால் அந்த சம்பவம் தாக்குதலால் நடக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
“US KC-135 எரிபொருள் நிரப்பும் விமானம் காணாமல் போனதை அமெரிக்க மத்திய கட்டளை அறிந்திருக்கிறது. இந்த சம்பவம் Operation Epic Fury-யின் போது நட்பு வான்வெளியில் நிகழ்ந்துள்ளது.
மேலும் மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவத்தில் இரண்டு விமானங்கள் ஈடுபட்டன.
ஒரு விமானம் மேற்கு ஈராக்கில் விபத்துக்குள்ளானது, இரண்டாவது விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது என அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது.
