
விலை உயர்வு மக்களின் சுமையை அதிகரிக்கும்
எரிபொருள் கையிருப்பு தொடர்பாக ஜனாதிபதியும் அமைச்சரும் வழங்கிய வாக்குறுதிகளுக்கு முரணாக, திடீரென எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பது அரசின் முறையற்ற நிர்வாகத்தையே காட்டுகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:-
“உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்து வரும் தற்போதைய சூழலில், உள்நாட்டில் விலையை உயர்த்தியிருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நிலக்கரி கொள்வனவின் போது இடம்பெற்ற பாரிய ஊழல்கள் மற்றும் முறைகேடுகளினால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்டவே, அரசு இந்தச் சுமையை மக்கள் மீது ஏற்றியுள்ளது. முறையான கேள்வி கோரல் நடைமுறைகளைப் பின்பற்றாமல் காலத்தை இழுத்தடித்தமையே இன்றைய நெருக்கடிக்குக் காரணமாகும்.
விவசாயிகள் தற்போது அறுவடைப் பணிகளில் ஈடுபட்டுள்ள போதிலும், நெல்லுக்கான நியாயமான விலையைத் தீர்மானிக்க அரசு தவறியுள்ளது. உர விநியோகத்திலும் பாரிய தாமதங்கள் நிலவுகின்றன. உள்நாட்டு உற்பத்தியைப் பாதுகாப்பதை விடுத்து, இறக்குமதிக்கே அரசு முன்னுரிமை அளித்து வருகின்றது.
நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சு மற்றும் சர்வதேச ரீதியிலான தொடர்பாடல்கள் மிகவும் பலவீனமடைந்துள்ளன. தகுதியற்ற நபர்கள் பொறுப்புகளில் இருப்பதாலேயே சர்வதேச ரீதியில் நாடு சிக்கல்களை எதிர்கொள்கின்றது. இது குறித்து ஜனாதிபதி உடனடியாக அவதானம் செலுத்தி உரிய தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
அரசியல் கூட்டணிகள் அல்லது மே தினக் கொண்டாட்டங்கள் குறித்துச் சிந்திப்பதை விட, நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்குத் தீர்வு காண அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.” – என்றார்
