
ஈரானுடன் யுத்தம் – அமெரிக்காவுக்கு இதுவரை எவ்வளவு செலவு?
அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சின் (Pentagon) தரவுகளின்படி, ஈரானுடனான போரின் முதல் 100 மணிநேரத்தில் மட்டும் அமெரிக்கா சுமார் $6.7 பில்லியன் டொலர்களைச் செலவிட்டுள்ளது.
இது ஒரு நாளைக்கு சராசரியாக $891 மில்லியன் டொலர்களாகும்.
ஆயுதங்கள் (Munitions): செலவிடப்பட்ட 6 பில்லியன் டொலர்களில் சுமார் 4 பில்லியன் டொலர்கள் ஏவுகணைகள் மற்றும் இடைமறிப்பு ஏவுகணைகளுக்காக (Interceptors) செலவிடப்பட்டுள்ளன.
இலக்குகள்: ஈரானின் ஏவுகணை ஏவுதளங்கள், கடற்படைக் கப்பல்கள் மற்றும் வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் உட்பட சுமார் 4,000 இலக்குகள் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.
ஆயுதக் கையிருப்பு அச்சம்: விலை உயர்ந்த இடைமறிப்பு ஏவுகணைகள் அதிவேகமாகத் தீர்ந்து வருவதால், அமெரிக்காவின் ஆயுதக் கிடங்கு காலியாகும் அபாயம் குறித்து காங்கிரஸ் (Congress) உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்
வெளியேறும் திட்டத்தை வகுக்க டிரம்புக்கு அழுத்தம்
ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டு இராணுவ நடவடிக்கையிலிருந்து வெளியேறுவதற்கான தெளிவான திட்டத்தை (Exit Strategy) வகுக்குமாறு ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு அவரது ஆலோசகர்கள் கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
இந்த மோதல் வெற்றிகரமாக அமைந்திருப்பதாக அதிகாரிகள் காட்டிக்கொண்டாலும், பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான பாதிப்புகள் அதிகரிப்பதற்கு முன்னர் முறையான பின்வாங்கல் திட்டமொன்றை அறிவிப்பதில் வாஷிங்டன் தற்போது தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றது.
யுத்தத்தின் முதல் இரண்டு நாட்களில் மாத்திரம் சுமார் 5.6 பில்லியன் டொலர் பெறுமதியான அதிநவீன ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் செலவிடப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் மூவர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஈரானின் 5,000 க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது நூற்றுக்கணக்கான துல்லியமான தாக்குதல் ஆயுதங்கள் (Precision weapons), இடைமறிப்பு ஏவுகணைகள் மற்றும் ‘டොமஹாக்’ (Tomahawk) ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதல்கள் காரணமாக அமெரிக்காவின் ஆயுதக் கிடங்குகள் வேகமாகத் தீர்ந்து வருவதாகவும், இது இந்தோ-பசிபிக் உள்ளிட்ட ஏனைய பிராந்தியங்களில் அமெரிக்க இராணுவத்தின் தயார் நிலையைப் பாதிக்கும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இராணுவ ரீதியான மாற்றங்கள் மற்றும் இழப்புகள்
செலவுகளைக் குறைப்பதற்காக, மில்லியன் கணக்கான டொலர்கள் பெறுமதியான ஏவுகணைகளுக்குப் பதிலாக, ஒரு இலக்கிற்கு 100,000 டொலர்களுக்கும் குறைவான செலவை ஏற்படுத்தும் லேசர் வழிநடத்தல் குண்டுகளைப் (Laser-guided bombs) பயன்படுத்த பென்டகன் தீர்மானித்துள்ளது.
அதேவேளை, ஈரானின் பதில் தாக்குதல்களை எதிர்கொள்ள ஏனைய பிராந்தியங்களில் உள்ள ‘தாட்’ (THAAD) மற்றும் ‘பெட்ரியட்’ (Patriot) ஏவுகணைத் தடுப்பு அமைப்புகள் மத்திய கிழக்கு நோக்கி நகர்த்தப்பட்டுள்ளன.
இந்த மோதலில் இதுவரை சில அமெரிக்க எப்-15 (F-15) போர் விமானங்கள் ‘நட்பு ரீதியான துப்பாக்கிச் சூடு’ (Friendly-fire) சம்பவங்களில் சேதமடைந்துள்ளதுடன், குவைத்தில் இடம்பெற்ற ட்ரோன் தாக்குதலில் 6 பேர் உட்பட மொத்தம் 7 அமெரிக்கப் படையினர் உயிரிழந்துள்ளனர்.
இராஜதந்திர நெருக்கடிகள்
ஈரானிய அச்சுறுத்தல்கள் காரணமாக சவூதி அரேபியா, துருக்கி உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள அமெரிக்க இராஜதந்திரிகள் அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர். ஈராக்கில் உள்ள பணியாளர்களைத் தரைவழியாக வெளியேற்றும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன், பாகிஸ்தான் மற்றும் நோர்வேயிலுள்ள அமெரிக்கத் தூதரகங்களிலும் பாதுகாப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ரியாத்திலுள்ள அமெரிக்கத் தூதரகக் கட்டடம் பலத்த சேதமடைந்துள்ளதால், அது மீண்டும் இயங்கப் பல மாதங்கள் எடுக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உலகளாவிய பொருளாதார அதிர்ச்சி
யுத்தம் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 120 டொலர் வரை உயர்ந்துள்ளது. இதனால் அமெரிக்காவில் பெற்றோல் விலை ஒரு கலன் 3.48 டொலராகவும், டீசல் விலை 4.66 டொலராகவும் அதிகரித்துள்ளது.
உலகின் எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கைக் கையாளும் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஊடான போக்குவரத்துத் தடைப்பட்டமையே இந்த விலை உயர்வுக்குக் காரணமாகும்.
G7 நாடுகள் அவசரகால நடவடிக்கைகள் குறித்து இணக்கப்பாட்டிற்கு வராத நிலையில், நுகர்வோர் பொருட்கள் மற்றும் விவசாயப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
டிரம்பின் நிலைப்பாடு
இந்த பொருளாதாரப் பாதிப்புகளைப் பொருட்படுத்தாத ஜனாதிபதி டிரம்ப், “அமெரிக்காவினதும் உலகினதும் பாதுகாப்பு மற்றும் அமைதிக்காகச் செலுத்தப்படும் மிகச் சிறிய விலையே இது” எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ரஷ்ய எண்ணெய் மீதான சில தடைகளைத் தளர்த்துவது குறித்தும் அவர் பரிசீலித்து வருகின்றார்.
எவ்வாறாயினும், ஈரானுடனான நீண்டகால மோதல் ஏற்பட்டால் அமெரிக்காவின் மூலோபாய எண்ணெய் சேமிப்பினால் (Strategic Petroleum Reserve) உலகளாவிய தேவையை முழுமையாக ஈடுகட்ட முடியாது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
