
மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரம் – இலங்கையர்களுக்கு அவசர இலக்கம் அறிமுகம்
மத்திய கிழக்கில் உள்ள உறவினர்கள் பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அவசர அழைப்புக்கா (Hotline) 1989 என்ற இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் +94 71 980 2822 என்ற WhatsApp / Imo இலக்கத்தையும் பயன்படுத்த முடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் பதற்றம் காரணமாக இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் தூதரகங்கள் ஊடாக, போர் பதற்றம் நிலவும் பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்கள் பின்பற்ற வேண்டிய விசேட வழிகாட்டல்களும் வழங்கப்பட்டுள்ளன.
அந்த வழிகாட்டல்களைப் பின்பற்றி அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
பஹ்ரைனில் இலங்கையர்கள் தங்கியிருந்த நகரொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், அங்குஅ தங்கியிருந்த இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்பும்
ஏற்படவில்லையெனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, அவசரத் தேவைகள் ஏற்படும் பட்சத்தில் அது குறித்து அறிவிப்பதற்கான விசேட அவசரத் தொலைபேசி இலக்கங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்,
அந்த இலக்கங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தெற்கு ஈரானில் பெண்கள் பாடசாலையொன்றின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை ஈரான் பதிலடி ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, இஸ்ரேல் முழுவதும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
நாட்டின் பல பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெருந்திரளான பொதுக் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் சமூகச் சேர்க்கைகள் அனைத்தும் அடுத்த அறிவிப்பு வரும் வரை தடை செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை மத்திய கிழக்கில் பரந்த மோதலை விரும்பவில்லையென பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.
பிராந்திய மோதலை மேலும் தீவிரப்படுத்த வேண்டாம் என்றும், ஈரானின் அணு திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும்
என்றும் பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அணு பேச்சுவார்த்தைகள் வியாழக்கிழமை உடன்பாடு எதுவும் எட்டப்படாத நிலையில், இந்த தாக்குதல் இடம்பெற்று
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
