சுரேஷ் சலே கைது பரபரப்பின் பின்னணி – பிரதான சூத்திரதாரியை கைது செய்வதற்கான சைகை?

சுரேஷ் சலே கைது பரபரப்பின் பின்னணி – பிரதான சூத்திரதாரியை கைது செய்வதற்கான சைகை?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – நீதி தேடும் 07 ஆண்டுகள் 

16 மாத ஆட்சி, நிறைவேறாத வாக்குறுதி 

பிரதான சூத்திரதாரியை நோக்கிய விசாரணையின் முன்னேற்றம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலே கைது செய்யப்பட்டப்பட்ட சம்பவம், இலங்கையின் பாதுகாப்பு மற்றும் அரசியல் உலகில் இந்த வாரம் மட்டுமின்றி இனிவரும் காலங்களிலும் பரபரப்பான சம்பவமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த கைது, 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது.

அரசியல், சட்ட மற்றும் சமூக பரிமாணங்களில் பல கேள்விகளை உண்டாக்கும் இந்த கைது, எதிர்காலத்தில் பிரதான சூத்திரதாரியை கைது செய்வதற்கான முன் ஆயத்த நடவடிக்கையாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இதனைப் பற்றிய விவாதங்கள் விசாரணை அமைப்புகள், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பரபரப்பாக இடம்பெற்று வருகிறது.

யார் இந்த சுரேஷ் சலே ?

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே 1987 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி அன்று இலங்கை இராணுவத்தில் இணைந்தார்.
பின்னர் பல மொழிகளில் திறன்களை மேம்படுத்திய அவர், 1993 ஆம் ஆண்டு இராணுவ புலனாய்வு பிரிவிற்கு தெரிவு செய்யப்பட்டார்.

2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை, பாரிஸ் நகரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் அவர் முதல் செயலாளராக பணியாற்றினார்.

அதன் பிறகு, பாதுகாப்பு அமைச்சின் வெளிநாட்டு புலனாய்வு தொடர்பாளராக கடமையாற்றிய பின்னர், 2012 ஒக்டோபர் மாதம்
இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை மலேசியாவில் உள்ள இலங்கை உயர் நிலையராலயத்தில் ஆலோசகராக பணியாற்றினார். 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் தேசிய பாதுகாப்பு பாடத்திட்டத்தை தொடர்ந்து கற்றுக்கொண்டார், என அவரது சட்டத்தரணி பசுன் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல், அவர் இலங்கை அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக பதவி வகித்தார்.
2024 ஆம் ஆண்டு, அவர் அந்த பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியன்று கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் உள்ள தேவாலயங்களும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் இலக்கு வைக்கப்பட்டு நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் இலங்கையின் சமகால வரலாற்றில் ஆழமான காயத்தை ஏற்படுத்தின.

இந்த தாக்குதல்களால் 45 வெளிநாட்டினர் உட்பட சுமார் 270 பேர் உயிரிழந்தனர். 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.
இந்த தாக்குதல்களின் பின்னணி, திட்டமிடல், பாதுகாப்பு தவறுகள், அரசியல் பொறுப்புகள்
இவை அனைத்தும் இன்று வரை முழுமையாகத் தெளிவாகாத கேள்விகளாகவே உள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலே இடையேயான தொடர்பு
‘சேனல் 4’ குற்றச்சாட்டுகள் என்ன?

2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 05 ஆம் திகதி அன்று, பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் சேனல் (Channel 4)
ஊடகம், ஒளிபரப்பிய ‘Sri Lanka’s Easter Bombings’ ஆவணப்படத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் (TMVP) முன்னாள்
செய்தித் தொடர்பாளர் ஆசாத் மௌலானா சுரேஷ் சாலே மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் சுரேஷ் சாலே ஆகியோர் ஈஸ்டர் தாக்குதலை பின்னணியில் இருந்து நடத்தினர் என, ஹன்ஸீர் ஆசாத் மௌலானா, குற்றம் சமத்தினார்.

அவரது கூற்றுப்படி, 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் புத்தளம் வனத்தவில்லு பகுதியில், அப்போது பிரிகேடியராக இருந்த சாலே மற்றும் தேசிய தௌஹீத் ஜமாத் தலைவர் சஹ்ரான் ஹாஷிம் (Zahran Hashim) ஆகியோருக்கு இடையே இரகசிய சந்திப்பு நடைபெற்றதாக கூறப்பட்டது. மேலும், ஈஸ்டர் தாக்குதலுக்கு முன் சில தொடர்புகளும் இருந்ததாக மௌலானா தெரிவித்தார்.

ஆனால், குறித்த சந்திப்பு நடந்ததாகக் கூறப்படும் காலத்தில் தாம் மலேசியாவில் இருந்ததாகவும், தாக்குதல் நடைபெற்ற சமயம் புதுடில்லியில் தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் பயின்றுக் கொண்டிருந்ததாகவும் சாலே கூறியுள்ளார்.

சுரேஷ் சலே கைது – விசாரணை ஆழமான திருப்புமுனையா?

சுரேஷ் சலே, 2026 பெப்ரவரி 25 ஆம் திகதி காலை பேலியகொடையில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் முதலில் 72 மணி நேர விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்ட அவர், பின்னர் 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பிரதி பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த மற்றும் சட்டப் பிரிவு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ஜாலிய சேனாரத்ன ஆகியோர் நடத்திய ஊடகச் சந்திப்பில், 2019 ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான போதுமான ஆதாரங்களின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

இவரிடம் நடத்தப்படும் விசாரணைகளின் அடிப்படையிலேயே அவர் பிரதான சூத்திரதாரியா அல்லது வேறு எவரும்
இருக்கின்றார்களா என்பது வெளியாகும் எனவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்தார்.

சதி கோட்பாடுகள் மற்றும் அரசியல் குற்றச்சாட்டுகள்

தாக்குதல்களுக்கு பின்னர் பரவலாக பேசப்பட்ட முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று, கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக பதவியேற்கும் அரசியல் சூழ்நிலையை உருவாக்கும் நோக்கில், இலங்கையின் உளவுத்துறையைச் சேர்ந்த அதிகாரி அல்லது அதிகாரிகள் சில முஸ்லிம் இளைஞர்களை தாக்குதல்களை முன்னெடுக்கத் தூண்டியிருக்கலாம் என்ற சந்தேகமாகும்.

இந்த குற்றச்சாட்டு அரசியல் மற்றும் சர்வதேச மட்டத்திலும் விவாதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, பிரித்தானியாவில் அமைந்துள்ள Channel 4 தொலைக்காட்சி 2023 ஆம் ஆண்டு ஒளிபரப்பிய ஆவணப்படம், இத்தகைய சதி கோட்பாடுகளுக்கு மேலும் ஊக்கமளித்ததாகக் கருதப்படுகிறது.

ஆனாலும் இவ்வாறான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாத நிலையில் உள்ளன. சம்பந்தப்பட்ட முன்னாள் அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.

அரசியல் வாக்குறுதிகள் மற்றும் தற்போதைய நிலை

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க 2024 செப்டம்பரில் பதவியேற்றபோது, ஈஸ்டர் தாக்குதலின் முழு உண்மையையும் வெளிக்கொணருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். கடந்த ஏப்ரலில் பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்துவதாகவும் அறிவித்திருந்தார்.

ஆனால் 16 மாதங்கள் கடந்தும் முழுமையான நீதிநடவடிக்கை நிறைவேறாத நிலையில், சுரேஷ் சலேவின் கைது, அரசியல் மற்றும் சமூக ரீதியாக பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சுரேஷ் சலேயை கைது செய்துள்ளதன் மூலம் ஜனாதிபதி பிரிவினைவாதிகளையும், கத்தோலிக்க மக்களையும் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களையும் மகிழ்ச்சிப்படுத்தி இருக்கிறார் என சிலர் கூறுகின்றனர்.

பிரிவினைவாதிகளை மகிழ்ச்சிப்படுத்தும் விடயத்தை ஜனாதிபதி தொடர்ந்து மேற்கொண்டுவருகிறார். யாழ்ப்பாணாத்துக்கு சென்றும் அதனையே மேற்கொண்டிருந்தார் என்றும் கூறுகின்றனர்.

சிலர் இதனை விசாரணையின் உண்மையான முன்னேற்றமாகக் கருதுகின்றனர். மற்றவர்கள் இது அரசியல் அழுத்தங்களை சமாளிக்கும் முயற்சியா என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர்.

முன்னோட்ட அரசியல் சைகையா அல்லது வெறும் விசாரணை நடைமுறையா?

ஒரு வேளை, இந்த ஏப்ரல் மாதத்திற்குள் பிரதான சூத்திரதாரியை கைது செய்யத் திட்டமிட்டிருந்தால், அதற்கு முன் விசாரணையின் திசையை பொதுமக்களுக்கு காட்டுதல், பாதுகாப்பு அமைப்புகளுக்குள் இருந்ததாகக் கூறப்படும் தொடர்புகளை சட்டபூர்வமாக உறுதி செய்தல், எதிர்கால அரசியல் அதிர்வுகளை சமாளிக்க முன் மனப்பக்குவம் ஏற்படுத்தல் இவை அனைத்தும் ஒரு முன்னோட்ட நடவடிக்கையாக கருதப்படலாம்.

இதை மறுபுறம் பார்க்கும்போது, இது முழுக்க முழுக்க ஆதார அடிப்படையிலான விசாரணை நடவடிக்கையாகவும் இருக்கலாம்.

பிரதான சூத்திரதாரி குறித்து ஏதேனும் உறுதியான ஆதாரம் கையில் இருந்தால் மட்டுமே அடுத்த கட்ட கைது நிகழும்.
எனவே, தற்போதைய கைது அத்தகைய உறுதியான ஆதாரங்களுக்கான வழி வகுக்கும் இடைநிலை கட்டமாக இருக்கலாம்.

இதேவேளை, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தற்போது முன்னெடுக்கும் கைது நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளுக்குப் பல்வேறு வியாக்கியானங்களைக் கொடுப்பவர்களின் பின்னணியில் உள்ள அரசியல் நிகழ்ச்சி நிரல் புரிகிறது என தெரிவித்த அருட்தந்தை சிறில் காமினி இதனை அரசியலாக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் இது ஒரு சுயாதீனமான விசாரணை, அதனைச் சுதந்திரமாகச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பிள்ளையான் மற்றும் தொடரும் விசாரணைகள்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஏற்கனவே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து புதிய தகவல்கள் கிடைத்ததா? சலே கைது அதனுடன் தொடர்புடையதா? இவை குறித்து அதிகாரப்பூர்வ விளக்கங்கள் இன்னும் வெளிவரவில்லை.

நீதிமன்ற சவால் மற்றும் சர்வதேச பரிமாணம்

ஆசாத் மௌலானா தற்போது வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார். அவர் இலங்கை நீதித்துறையில் சாட்சியமளிக்கத் தயங்கியுள்ளார். சர்வதேச சுயாதீன விசாரணை முன்பே மட்டுமே சாட்சியமளிப்பேன் என்ற நிலைப்பாட்டில் உள்ளார்.

இதனால், அவரது குற்றச்சாட்டுகள் இலங்கை நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படாதவரை, அவை சட்ட ரீதியாக உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகளாகவே தொடர்கின்றன.

திருப்புமுனையா, அரசியல் நாடகமா?

முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் கைது செய்யப்பட்டிருப்பது இலங்கையின் பாதுகாப்பு வரலாற்றில் அரிதான ஒன்று.
இது உண்மையில் ஈஸ்டர் தாக்குதலின் மூளையை கண்டுபிடிக்கும் வழியில் ஒரு திருப்புமுனையா,
அல்லது இன்னும் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலான அரசியல் நடவடிக்கையா என்பது காலமே தீர்மானிக்கும்.

உண்மை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டும். குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்படும்வரை அவை குற்றச்சாட்டுகளாகவே
கருதப்பட வேண்டும் என்பதும் சட்டத்தின் அடிப்படை.

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதே இறுதி இலக்கு. அந்த நீதி அரசியல் நிழலின்றி, ஆதாரங்களின் அடிப்படையில், வெளிப்படையான முறையில் நிலைநிறுத்தப்பட வேண்டியது அவசியம்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )