
தைவான் அருகே ஜப்பானின் மிகப்பெரிய இராணுவ நகர்வு- யோனகுனியில் வான் ஏவுகணை குவிப்பு
2031 ஆம் ஆண்டுக்குள் ஜப்பான், தைவானுக்கு அருகிலுள்ள தனது யோனகுனி தீவில் (Yonaguni Island) தரையிலிருந்து வான் ஏவுகணைகள் நிலைநிறுத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த தகவலை ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி (Shinjiro Koizumi) வெளியிட்டுள்ளார்.
யோனகுனி தீவு, தைவான் கடற்கரையிலிருந்து சுமார் 110 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.
தைவானை தனது பகுதியாகக் கருதும் சீனா, தேவையேற்படின் பலத்தைப் பயன்படுத்தி மீண்டும் ஒன்றிணைப்போம் என முன்பே எச்சரித்திருந்தது.
தைவானுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டால் ஜப்பான் தற்காப்புப் படையை செயற்படுத்தும் என ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி (Sanae Takaichi) கடந்த நவம்பரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில்,டோக்கியோ (Tokyo) மற்றும் பெய்ஜிங் (Beijing) இடையேயான உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
தைவானுக்கு அமெரிக்கா ஆதரவாக இருப்பதால், அங்கு ஏற்படும் ஏதேனும் மோதல் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான நேரடி இராணுவ மோதலாக மாறக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அண்மையில் தேசிய பாதுகாப்பு காரணங்களைக் குறிப்பிட்டு சீனா 20 ஜப்பானிய நிறுவனங்களுக்கு ஏற்றுமதி தடைகள் விதித்தது.
அதனைத் தொடர்ந்து, யோனகுனி தீவில் நடுத்தர தூர தரையிலிருந்து வான் ஏவுகணைகள் அமைக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி அறிவித்தார்.
இந்த ஏவுகணைகள் யோனகுனி வான்வெளிக்குள் நுழையும் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.
மேலும், 2026 ஆம் நிதியாண்டில் அங்கு மின்னணு போர் பிரிவும் அமைக்கப்பட உள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் அமைதியான தீவாக இருந்த யோனகுனியை ஜப்பான் முக்கிய இராணுவ கண்காணிப்பு மையமாக மாற்றியுள்ளது. தற்போது அங்கு சுமார் 160 தற்காப்புப் படையினர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த புதிய நடவடிக்கை, பிராந்திய பாதுகாப்பு சூழ்நிலையை முன்னிட்டு ஜப்பான் தனது பாதுகாப்பு வரம்பை விரிவுபடுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. திட்டத்தின் காலஅளவு எதிர்கால வசதி மேம்பாடுகளைப் பொறுத்து மாறக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
