
இந்தியாவில் ஏஐ தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது
இந்தியாவில் ஏஐ தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருவதாக கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
இந்திய தலைநகர் புதுடில்லியில் நடைபெற்ற ஏஐ மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இங்கு அவர் கூறியுள்ளதாவது,
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் கூகுள் சார்பில் 15 பில்லியன் டாலர் முதலீட்டில் ஏஐ மையம் அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
புதிய ஏஐ தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படுவதன் ஊடாக இந்தியா முழுவதும் தொழில் வாய்ப்புகள் பெருகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா, அமெரிக்காவை இணைக்கும் வகையில் கடலுக்கு அடியில் ஆப்டிக் கேபிள்கள் பதிக்கப்படும். இந்திய அரசு செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் மூலம் விவசாயிகளுக்கு வானிலை முன்னறிவிப்புகளை வழங்குகிறது. இந்த முயற்சியை பாராட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு யூ டியூப் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என்று எவரும் நினைத்துப் பார்க்கவில்லை. இப்போது லட்சக்கணக்கானோர் யூடியூப் மூலம் லாபம் பெறுகின்றனர்.
இன்றைய காலத்தில் ஏஐ தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த தொழில்நுட்பம் தொழில் துறையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
கூகுளின் டீப்மைண்ட் நிறுவனம், ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் ஆல்பாபோல்ட் என்ற மாடலை உருவாக்கியது. இதன்மூலம் புரோட்டீனின் 3 டி வரைபடம் உருவாக்கப்பட்டது. இதன் காரணமாக மருத்துவத் துறையில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டிருக்கிறது. ஏஐ தொழில்நுட்பத்தால் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கைமேம்படும் எனவும் அவர் வலியுறு்தியுள்ளார்.
அறிவியல் துறையில் மிகக் கடினமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றும் சுந்தர் பிச்சை மேலும் தெரிவித்துள்ளார்.
