வடகொரியாவின் அடுத்த தலைவர் 13 வயது சிறுமியா?

வடகொரியாவின் அடுத்த தலைவர் 13 வயது சிறுமியா?

உலக நாடுகளைத் தனது ஏவுகணை சோதனைகளால் அச்சுறுத்தி வரும் வடகொரியாவில், தற்போது ஒரு புதிய மாற்றம் தென்படத் தொடங்கியுள்ளது.

அந்நாட்டின் தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன், தனது 13 வயது மகள் கிம் ஜு ஏ-வை நாட்டின் அடுத்த வாரிசாக அதிகாரப்பூர்வமாக முன்னிறுத்தி வருவதாகத் தென்கொரிய உளவு அமைப்புகள் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளன.

வடகொரிய அதிபர் குடும்பத்தைப் பற்றிய தகவல்கள் எப்போதும் மிகவும் ரகசியமாகவே பாதுகாக்கப்படும்.

2013 இல் அமெரிக்கக் கூடைப்பந்து நட்சத்திரம் டென்னிஸ் ரோட்மேன் வடகொரியா சென்றபோதுதான், கிம் ஜாங் உன்னுக்கு ‘ஜு ஏ’ என்ற மகள் இருப்பது உலகுக்குத் தெரியவந்தது. அதுவரை அவர் ஒரு ரகசியக் குழந்தையாகவே வளர்ந்து வந்தார்.

2022ஆம் ஆண்டு ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையின்போதுதான், ஜு ஏ முதன்முதலில் பொதுவெளியில் தோன்றினார்.

ஒரு சிறுமி ராணுவ நிகழ்வுகளில் கலந்துகொள்வது சாதாரணமானது என முதலில் கருதப்பட்டாலும், அதன் பிறகு நடந்த அனைத்து முக்கிய ராணுவ அணிவகுப்புகள் மற்றும் பொது நிகழ்வுகளில் அவர் தனது தந்தைக்கு நிகரான முக்கியத்துவத்துடன் காணப்பட்டார்.

வடகொரியாவில் பெண்களுக்கு நீண்ட கூந்தல் மற்றும் ஆடம்பர ஆடைகளுக்குக் கடும் கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், ஜு ஏ மட்டும் விலையுயர்ந்த டிசைனர் ஆடைகளுடனும், நவீன சிகை அலங்காரத்துடனும் வலம் வருகிறார்.

தொடக்கத்தில் “அன்புக்குரிய மகள்” என்று அழைக்கப்பட்ட அவர், தற்போது “மரியாதைக்குரிய மகள்” என்றும், அரசாங்க ஊடகங்களில் மிக உயரிய பதவிகளுக்கு உரிய மரியாதையுடனும் சித்தரிக்கப்படுகிறார்.

சமீபத்திய ராணுவ அணிவகுப்புகளில் ராணுவ தளபதிகள் அவருக்கு மரியாதை செலுத்துவதும், தந்தையுடன் இணைந்து அவர் ஏவுகணைகளைப் பார்வையிடுவதும் அவர் வெறும் ‘மகள்’ மட்டுமல்ல, ‘தலைவி’ என்பதற்கான சமிக்ஞைகளாகப் பார்க்கப்படுகின்றன.

1948 முதல் கிம் குடும்பத்தின் ஆண் வாரிசுகளே நாட்டை ஆண்டு வரும் நிலையில், ஒரு பெண் தலைவராக உருவெடுப்பது வடகொரியாவின் ஆணாதிக்க அரசியல் கட்டமைப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் தற்போது அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்தி வரும் நிலையில், ஜு ஏ-வின் வருகை எதிர்கால அதிகாரப் போட்டியை உருவாக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )